காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியச் சுதந்திரத்திற்காக போராட வந்தவர், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து, பல தனி ராஜ்யங்களை ஒன்றிணைத்து இன்றைய நவீன இந்தியாவை உருவாக்கியதில் மிகப்பெறும் பங்காற்றியவர் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல். காங்கிரஸில் முக்கியஸ்தராக இருந்து வந்த இவரை, தற்போது ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் அவர்களுடைய தலைவராகவே சொந்தம் கொண்டாடி வருகின்றனர். சுதந்திரத்திற்கு பின், ஜவஹர்லால் நேருவை கொண்டாடும் காங்கிரஸ் கட்சியினர் சர்தார் வல்லபாய் படேலை மறந்துபோனதும் இதற்கான காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
சர்தார் வல்லபாய் படேலை காங்கிரஸ்காரர்கள் கொண்டாடவில்லையென்றாலும் பேசவாவது செய்திருக்கலாம் என்பது பலரின் கருத்து. அவர்கள் அவரை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல மறந்தபோது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அதனை தற்போது பயன்படுத்தி வருகின்றன. இதனால் பலரும் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ்-காரரா? மதவாதியா? போன்ற பல கேள்விகளால் குழம்பியிருக்கின்றனர். இந்திய தேசத்தை உருவாக்கப் பாடுபட்டவர்களில் ஒருவர், காந்தியை நம்பியவர், அதே வேளையில் தன் துணிவைக் காட்டவும் பயப்படாதவர் சர்தார் வல்லபாய் படேல்.
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியா என்னும் நாட்டை ஒன்றிணைப்பதில் பல சிக்கல்கள், கொள்கை முரண்கள் எனப் பற்பல காரணிகள் பிரச்சனைகளாகவே இருந்து வந்தது. அவை அப்போதைய இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தமாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தன. 1949ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், இந்தியா சுதந்திரம் பெற்று மூன்றரை வருடங்களான நிலையில் சென்னை தீவுத்திடலில் சர்தார் வல்லபாய் படேல் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவர்களின் கொள்கையான ஹிந்துராஜ்யம் குறித்தும் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் குறித்தும் பேசியது பின்வரும்படி...
“நம்முடைய முதல் பாடத்தையே மறந்ததால், நம்முடைய தலைவரை இழந்துவிட்டோம். ஒற்றுமைதான் நம்முடைய வலிமை என்பதை அவர் போனபிறகும் கூட உணரவில்லை என்றால் துரதிர்ஷ்டம் நம்மைப் பிடித்துக்கொள்ளும்.
ஒற்றுமையாக இருக்க சாதி, மத வேறுபாடுகளை மறந்து, அனைத்து இந்தியர்களும், அனைவரும் சமமானவர்கள் என்பதை நினைவுகூர வேண்டும். ஒரு சுதந்திரமான நாட்டில் இரண்டு மனிதர்களுள் ஒருவர் மட்டும் உயர்ந்தவராக இருக்க முடியாது. அனைவருக்கும் சமமான பொறுப்புகள், உரிமைகள், வாய்ப்புகள் இருக்க வேண்டும். இது நடைமுறைக்கு மிகவும் கடினமான ஒன்றுதான், ஆனால் இறுதிவரை இதை போராடி எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த நாட்டில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கிய விஷயமாக இருக்கிறது. நம்முடைய சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு வளரும் வரையாவது, நம்முடைய அரசாங்கத்தை மிரட்ட முடியும் என்பதை மறந்துவிட வேண்டும். ஒவ்வொரு கூட்டத்தாலும் இப்படி தினசரி மிரட்டப்பட்டால் அரசாங்கத்தால் சரியாகச் செயல்பட முடியாது.
இப்படியான கூட்டங்கள் விரும்புவது அவர்களின் சொந்த நேர்மையான சிந்தனைப்படி நல்லதாக இருக்கலாம். ஆனால் காந்தி நாம் விரும்புவதைப் பெறுவதற்காகவும் நமது இலட்சியத்தை அடையவும், உண்மை மற்றும் அகிம்சை போன்ற வழிகளை நம் முன் வைத்து சென்றுள்ளார். அரசாங்கத்தின் அதிகாரத்தை அச்சுறுத்தவும் சவால்விடவும் தொடங்கி, ஒரு சில கூட்டம் தங்கள் நோக்கங்களை அழுத்தத்தினால் வலுக்கட்டாயமாகத் திணித்தால், அரசாங்கத்தால் ஆக்கப்பூர்வமான எதையும் செய்ய முடியாது. இந்த நாட்டில் ஏற்படும் அழுத்தங்கள் குழப்பத்தையும் கோளாறையும் உருவாக்கும், அது நாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்தும்.
எங்களது அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கவனித்து வருகிறோம். தங்கள் வலிமையைக் காட்டி இந்து ராஜ்யத்தைக் கட்டாயமாகக் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதை எந்த அரசாங்கமும் பொறுத்துக்கொள்ள முடியாது. பிரிக்கப்பட்ட (பாகிஸ்தான்) பகுதியைப் போலவே இந்த நாட்டிலும் கிட்டத்தட்ட இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ளனர். நாங்கள் அவர்களை விரட்டப் போவதில்லை. அவ்வாறு நாங்கள் செய்தால் அது ஒரு கொடுமையான நாளாக இருக்கும். அவர்கள் இங்கேதான் இருக்கப் போகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் நாடு என்று அவர்களை உணரச் செய்வது நமது கடமையும் நமது பொறுப்பாகும். மறுபுறம், இந்த நாட்டின் குடிமகன்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் பொறுப்பும் கூட” என்று பேசியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தை ஏற்றுக்கொண்டு இந்தியக் கொடியை மதித்தால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதேபோல, அப்போது கம்யூனிஸ கொள்கையில் தீர்க்கமான நம்பிக்கை கொண்ட சிலர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கியதையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். ஒரு பேட்டியில்கூட, “நான் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று ஒரு சமயத்தில் பலரும் என்னைக் கூறினார்கள். ஒரு வகையில் அதுவும் உண்மைதான். ஏனென்றால் அந்த இளைஞர்கள் தைரியமானவர்களாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் பயமில்லாதவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், கொஞ்சம் கோப குணமுடையவர்கள். அவர்களின் துணிச்சல், சக்தி மற்றும் தைரியத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும், அவர்களின் உண்மையான பொறுப்புகளையும் கடமையையும் உணர வைத்து அவர்களின் கோபக்காரத்தனத்தை குணப்படுத்தவும் நான் விரும்பினேன்” என்று கூறியிருந்தார். அவர் சொல்வதைப்போல நடந்துக்கொண்டால் காங்கிரஸிலும் இணைத்துக்கொள்வதாகவும் பேசியிருக்கிறார்.