தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீண்டகாலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சர் ஆனதிலிருந்தே அவரை குறிவைத்துத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்கள் குறித்து மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் கேட்டபோது, "தமிழக அரசியலில் உதயநிதி மட்டும்தான் வாரிசாக அரசியலுக்கு வந்துள்ளாரா? இந்திய அரசியலிலோ அல்லது தமிழக அரசியலிலோ வாரிசு என்று யாருமே இதுவரை இருந்தது இல்லையா? புதிதாக இவர் மட்டும்தான் அரசியலுக்கு வந்திருக்கிறாரா என்பதை, அவரை விமர்சனம் செய்பவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
அதிமுகவை முதலில் யார் ஆரம்பித்தார்கள், எம்ஜிஆர் தானே. அவருக்குப் பிறகு தமிழக முதல்வராக யார் வந்தார்கள், ஜானகி. அவருக்குப் பிறகு அதிமுகவில் யார் முதல்வராக வந்தார்கள், ஜெயலலிதா. இவர்கள் இருவரும் யார்? அதிமுகவில் பல ஆண்டுக்காலம் உறுப்பினராக இருந்தவர்களா? ஜானகி அதிமுகவின் உறுப்பினராக இத்தனை ஆண்டுக்காலம் இருந்துள்ளார்; அதைப்போல ஜெயலலிதாவும் இத்தனை ஆண்டுக்காலம் அதிமுகவின் உறுப்பினராக இருந்த பிறகே முதல்வர் பதவிக்கு வந்ததாக ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள். கட்சிக்கு வந்த மூன்றே வருடத்தில் ஜெயலலிதா நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார். வீட்டிலிருந்த ஜானகி நாட்டின் முதலமைச்சர் ஆகிறார். அப்போது வராத வாரிசு அரசியல், உதயநிதி வந்தால் வருகிறதா?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வாரிசு அரசியல் உச்சத்திலிருந்து வருகிறது. ஆனால், அதைப்பற்றி அங்கே யாரும் விமர்சனம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் எந்தக் கட்சியில் வாரிசுகள் பதவியில் இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள். காங்கிரஸ், பாஜக, ஆந்திரா என இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாரிசு அரசியல் இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது. அரசியலுக்கு வந்த பிறகு அவரின் திறமைகளின் அடிப்படையில் அவர்களை விமர்சனம் செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் வருவதே தவறு என்றால், அவர்களின் நோக்கம் தனிப்பட்ட வெறுப்பாக இருக்குமே தவிர அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. இவர்களின் நோக்கம் முழுவதும் உதயநிதி அமைச்சரானதில் இல்லை. நூல் இல்லாத ஒருவன் அரசியல் களத்திற்கு மீண்டும் வந்துவிட்டானே என்ற ஆற்றாமையே அவர்களை இப்படிப் பேச வைக்கிறது" என்றார்.