தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் பகிர்ந்து கொள்கிறார்.
நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என்பது அனைவருக்கும் தெரியும். எதிரில் பேசுபவர் யார் என்பதே அந்த ஆடியோவில் வெளியிடப்படவில்லை. இந்த ஆடியோ வெளியான பிறகு நடுநிலையாளர்கள் என்கிற போர்வையில் இருக்கும் பத்திரிகையாளர்கள் சிலர் முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றனர். நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் பேசினர். திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய களங்கம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர். உண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன்பே இவை அனைத்தும் நடந்தன.
இதற்கு பி.டி.ஆர் இரண்டு முறை விளக்கம் கொடுத்தார். இதுபோன்ற மூன்றாம் தர அரசியலுக்கு தான் பதில் தர விரும்பவில்லை என்றார். ஆனாலும் மீண்டும் மீண்டும் முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றனர். அமைச்சரே இதற்கு பதில் கூறிவிட்ட பிறகு தான் இதுபற்றிப் பேசி அவர்களுக்கு விளம்பரம் தர விரும்பவில்லை என்று முதல்வரே தற்போது கூறிவிட்டார். இதன் மூலம் பி.டி.ஆர் பதவி விலகமாட்டார் என்பதை முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார். பி.டி.ஆர் ஒரு சிறந்த நிதியமைச்சர். திமுக ஐடி விங் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் மற்றவர்கள் கேட்காத கேள்விகளை பிடிஆர் கேட்பதால் அவரைப் பதவி விலக வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசே முயல்கிறது. பல்வேறு நபர்களின் கருத்துக்களை கேட்டுத்தான் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவார்கள். 12 மணி நேர வேலை சட்டத்தை சில துறையினருக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்ததாக முதல்வரே சொல்லிவிட்டார். ஆனால் எதிர்ப்பு வந்ததால் சட்டத்தைத் திரும்பப் பெற்றுவிட்டார். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எப்படித் துணிவு வேண்டுமோ அதைப்போல அதைத் திரும்பப் பெறுவதற்கும் துணிவு வேண்டும்.
கோவில்களில் ஆடு மாடு பலியிடுவதற்குத் தடை விதித்து ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார். மக்கள் கடுமையாக எதிர்த்தபோதும் பின்வாங்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு பின்வாங்கினார். அவரைப் போல் இல்லை முதலமைச்சர் ஸ்டாலின். தங்களுடைய தொழிற்சங்கமே இந்த சட்டத்தை எதிர்த்ததை எண்ணி நான் பெருமையடைகிறேன் என்றார் முதல்வர். வேளாண் சட்டத்தை விவசாயிகளின் ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு தான் பின்வாங்கியது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் முதலமைச்சர் அப்படிச் செய்யவில்லை.
பாஜக எப்போதுமே சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்ன பாஜக, இன்று கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச பால், சிலிண்டர் வழங்குவோம் என்று அறிவித்துள்ளது. இவர்கள் சொல்வது எதையும் நம்ப முடியாது என்பது இதன் மூலம் தெரிகிறது. விலையுயர்ந்த கோட் அணியும் பிரதமர் தன்னை ஏழைத்தாயின் மகன் என்பார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலை தான் இன்று இருக்கிறது. பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது கர்நாடக மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இலவசங்களை அறிவித்துள்ளனர்.