Skip to main content

போலீஸ் 'எஸ்.ஐ'யிலிருந்து சி.பி.ஐ நீதிபதி!

Published on 21/12/2017 | Edited on 21/12/2017
போலீஸ் 'எஸ்.ஐ'யிலிருந்து சி.பி.ஐ நீதிபதி!

2ஜி நீதிபதி ஓ.பி.ஷைனி விவரங்கள்... 





இன்று (21 டிசம்பர் 2017) ஒரே நாளில்  தமிழகம் இரண்டு அரசியல்  பரபரப்புகளால் சூழப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழி, ஆ.ராசா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மைக்கேல் டி குன்ஹா, குமாரசாமி என தமிழகத்தில் அறியப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த  நீதிபதிகளின் வரிசையில் இன்றைய தீர்ப்பை வழங்கியுள்ள  CBI நீதிபதி  ஓ.பி.ஷைனி இணைந்துள்ளார். அவரைப் பற்றிய தகவல்கள்...        

  • நீதிபதி O.P.ஷைனி (ஓம் பிரகாஷ் ஷைனி) டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளராக 1981 தொகுப்பில் இணைந்தவர்  
  • ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, 58 வயதான O.P.ஷைனி, சட்டப்படிப்பு முடித்தவர்.  ஆறு வருடங்கள் உதவி ஆய்வாளராக பணியாற்றி பின்னர் நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியானவர்
  • இவர் ஏற்கனவே 2010இல் காங்கிரஸ் ஆட்சியில்  நடந்த  ' டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்'  ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியவர்  
  • 2000ஆம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்ற நிலையில், சில நீதிபதிகள் அவ்வழக்கை விசாரிக்கத் தயங்கினர். பின்னர் ஓ.பி.ஷைனி அந்த வழக்கை விசாரித்து முக்கிய குற்றவாளி முகமது ஆரிஃப்க்கு தூக்கு தண்டனை அளித்தார் 
  • 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2G ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும்  நீதிபதியாக  ஓ.பி.ஷைனி  நியமிக்கப்பட்டார் 
  • 2011இல் கனிமொழிக்கு பெயில் கேட்டு விண்ணப்பித்தபொழுது, நிராகரித்தார் 
  • 2013ஆம் ஆண்டில் கலைஞரின் மனைவி தயாளு அம்மாளின் உடல்நிலையை காரணம் காட்டி, வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியபோது 'வாதங்கள் திருப்திகரமாக இல்லை' என்று கூறி உறுதியாக மறுத்தார் 
  • தனது தீர்ப்பில், 'முதலில் மிகுந்த ஆர்வத்துடன் வழக்கை அணுகிய அரசு தரப்பு (CBI), போகப் போக வலுவிழந்து, பின்னர், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது' என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.    

சார்ந்த செய்திகள்