இந்த விஷயம் ஏன் இவ்வளவு வேகமாக வந்திருக்கிறதென்றால், வெள்ளத்திற்குபின்பு மோடியையும், பாஜகவையும் மொக்கையாக்கியதில் கேரளாதான் நம்பர் ஒன். பன்ச் மோடி சேலஞ்சில் இருந்து பல விஷயங்களில் அவர்கள் அசிங்கப்படுத்தியதுபோல் நாம் செய்யவில்லை. நாம் ‘கோ பேக் மோடி’ என்றோம் அவ்வளவுதான். ஆனால் அவர்கள் சர்காஸ்டிக்கா நிறைய வீடியோ, மீம்கள் என செய்துவிட்டார்கள். வெள்ளத்தின்போது கேரள மக்களுக்கு மத்திய அரசு செய்த துரோகத்தை, இந்த சின்ன விஷயம் கொண்டு மறக்கடித்துவிட்டார்கள். இது மிகவும் திட்டமிடப்பட்ட வழக்கு. இதை பெண்கள் வழக்கறிஞர்கள் அமைப்புதான் போட்டார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது, தீபக்மிஷ்ராவை அவர்கள்தான் இந்த தீர்ப்பளிக்கும்படி அழுத்தம் கொடுத்தார்கள். அதையெல்லாம் விடுங்கள். ஆனால் இந்த சூழ்நிலையை எப்படி பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க., சங்பரிவார் அமைப்புகள் விரும்பியதோ அதை அவ்வாறே பயன்படுத்திக்கொண்டன. சேலத்தில் ஒரு ஊழல்வாதி கல்லூரி நடத்துகிறார். அந்தக் கல்லூரி மாணவர்களையெல்லாம் கூட்டிவந்து போராட்டம் நடத்தினார்கள். பாஜக இதை நடத்தியது.
ஐயப்பன் காட்டுக்குள் சென்று காடோடு காடாக ஒன்றிவிட்டார். இயற்கை வழிபாட்டுக்கு அவர்தான் முக்கிய பிரதிநிதி. அங்கிருக்கிற பதினெட்டு மலைகளைத்தாண்டி வந்தால்தான் இறைவனை அடைவீர்கள் அப்படினு சொன்னாரு. அவர் ஒரு மன்னர், அவரே அவரின் அரண்மனையை விட்டுவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டார். ஆனால் இவர்கள் ஏன் சபரிமலையில் அரண்மனை கட்டுகிறார்கள். சன்னிதானத்திலேயே விஜய் மல்லையாவின் பெயர் இருக்கிறது, படியேறும்போது முதல் பெயரே விஜய் மல்லையா பெயர்தான். தங்க கவசம் கொடுத்துள்ளார். படிகளில் அவர்பெயர், சன்னிதானத்தில் அவர்பெயர், சிறுவல்லி ஆரம்பிக்கும் இடத்திலும் அவர்பெயர் இப்படி நானே 3,4 இடங்களில் பார்த்துள்ளேன். ஒரு குடிகாரனிடம் பணம் பெற்று உங்களால் கவசம் போடமுடிகிறது. அது தீட்டு இல்லையா? காடு அழிகிறது அதைப்பற்றி யாரும் பேசமாட்டிங்கிறோம். பார்ப்பனிய வழிபாடு என்பது இதுதான், 18 மலைகளின் பெருமைகளைதான் பேசுகிறது சபரிமலை, ஆனால் அதை 18 படிகளை ஏறினால் போதும், 18 மலைகளை சுற்றியதற்கு சமம் என்று மாற்றிவிட்டார்கள். இது ஒரு சிறிய தந்திரம். கங்கையைக் காப்பாற்றவேண்டுமென்றால் இமயமலையை பாதுகாக்கவேண்டும். ஏன்னா அது அங்கிருந்துதான் வருகிறது. நதிகளை பாதுகாக்கவேண்டும். தண்ணீரை பாதுகாக்கவேண்டும். அதை பாதுகாக்கவேண்டுமென்றால் நீங்கள் அரசாங்கத்தை கேள்விகேட்க வேண்டும், திட்டவேண்டும். அதெல்லாம் எங்களால் முடியாது அதனால் நாங்கள் கங்கா மையா னு சின்னதாக ஒன்றை வைத்துவிடுவோம். வருபவர்களெல்லாம் கங்கா மையாவை கும்பிட்டுவிட்டு செல்லுங்கள். இதுதான் அவர்களின் தந்திரம்.