காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு நீக்கியது. இதற்கு பெரும்பாலான எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இருப்பதால் பாஜக அரசு அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அனைத்து கேள்விகளுக்கும் அவர் அதிரடியாக பதிலளித்தார். அவை வருமாறு,
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகையான பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீ்ர் மக்கள் இந்தியாவின் மற்ற மாநில மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு ஒரு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறார்களே?
காஷ்மீர் மக்கள் இதுவரை எப்படி இருந்தார்கள், வேறு நாட்டுடன் இணைந்தா இருந்தார்கள். அந்த மாநில மக்கள் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். நாடு பிரிக்கப்பட்ட போது பாகிஸ்தான் தனியாகவும், காஷ்மீர் தனியாகவும், இந்தியா தனியாகவும்தான் இருந்தது. இதைதாண்டி ஹைத்ராபாத் நவாப் தனியாக இருந்தார். அங்கு படைகளை அனுப்பி படேல் அந்த பகுதியை மீட்டார். ஆனால், காஷ்மீரை அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில் ஹைத்ராபாத் என்பது நமது மாநிலங்களுக்கு இடையில் இருந்தது. அதனால், அதனை எளிதாக மீட்க முடிந்தது. காஷ்மீரை சுற்றிஉள்ள பகுதிகள் என்ன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இருக்கிறது. மேலும், மற்ற இந்த மாநிலங்களில் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் உடுறுவ முயன்றால், கடல் வழியாகத்தான் வர வேண்டும். அவ்வாறு வரும்போது நாம் அதனை எளிதில் கண்டறிந்து விடலாம். ஆனால், காஷ்மீர் அப்படி அல்ல. அது முழுவதும் நிலப்பரப்பால் ஆனது. மேலும், அது சுதந்திரத்துக்கு பிறகு தனியாக செயல்பட்டு வந்தது.
அதன் அசைக்க முடியாத தலைவராக ஷேக் அப்துல்லா இருந்தார். காஷ்மீரை இந்து மன்னர் ஆண்டார் என்றாலும், அவர் பெயரளவிலேயே இருந்தார். காஷ்மீர் மக்களை தன் விரல் அசைவில் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் ஷேக் அப்துல்லா. முஸ்ஸிம் மக்கள் பெருவாரியாக இருந்தாலும், அவர்கள் பாகிஸ்தானோடு இணைந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தனித்துவமாக இருக்க விரும்பினார்கள். ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பாகிஸ்தான் பிரதமர் ஜின்னா போரிட்டு அவர்களோடு தங்களை இணைத்துகொள்வார்கள் என்று அந்நாட்டு மக்கள் அஞ்சினார்கள். எனவே, தங்களுக்கு உரிய சிறப்பு சலுகைகளை நேரு வழங்கினால் நாங்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்கள். அதன்படி அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி நேரு அவர்களை இந்தியாவோடு இணைந்துக் கொண்டார்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குள் தற்போது அவர்கள் முழுமையாக வந்துள்ளார்கள் என்றும், இந்திய ஒருமைபாட்டிற்கு எதிராக இனி எந்த செயலும் காஷ்மீருக்குள் நடக்காது என்றும் அரசு தெரிவித்துள்ளதே?
அவர்களாக விரும்பி வந்தவர்களுக்கு நீங்கள் ஏன் உரிமை கோருகிறீர்கள். அவர்களுக்கு கொடுத்த உறுதி மொழியை மத்திய அரசு தற்போது மீறியுள்ளது. இது நம்பிக்கை துரோகம் என்றுதான் நான் சொல்லுவேன். அதுதான் உண்மையும் கூட. உங்களுக்கு சிறப்பு சலுகை தருவோம் என்று கூறிவிட்டு, அவர்களை நம்ப வைத்து ஏமாற்றுவது என்பது மனிதத்தன்மையே இல்லை. ராணுவத்தை வைத்தே ஆட்சி நடத்தலாம் என்று நீங்கள் நினைப்பது எத்தனை நாளுக்கு சாத்தியம். 30000 வீரர்களை வருடந்தோறும் காஷ்மீரில் இருக்க செய்வீர்களா? அது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அரசு நினைக்கிறதா என்று தெரியவில்லை. மிரட்டல் போக்கை கடைபிடிக்கலாம் என்று அரசு நினைக்குமேயானால் அதற்கான எதிர்வினைகளை அனுபவித்தே தீரவேண்டும். காஷ்மீருக்கு கொடுத்த சிறப்பு சலுகைகள் நீக்கப்பட்டுள்ளதால், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா போன்ற மாநிலங்கள் அச்சமடையாதா? தங்களுக்கான சலுகைகளும் பறிக்கப்படும் என்று அம்மாநில மலைவாழ் மக்கள் அச்சப்படமாட்டார்களா?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியா மீட்கும் என்று மத்திய அரசு கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாகிஸ்தானை கூட மீட்க வேண்டியதானே, அதுவும் இந்தியாவில் இருந்த ஒரு பகுதிதானே. உலக நாடுகள் இந்தியாவின் ஒவ்வொரு செயலையும் உற்று நோக்கி வருகிறது. மோடி கேட்டுக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் சமரம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் அதிபர் கூறிய சில தினங்களில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி என்றால் இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றுதானோ அர்த்தம். தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று காஷ்மீர் மக்கள் நினைப்பார்களே, அது இந்திய அரசுக்கு நல்லதல்ல. நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக யாராவது உச்சநீதிமன்றம் சென்றார்கள் என்றால், இன்னும் இரண்டே மாதத்தில் இந்த சட்ட திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிடும் என்பதே என்னுடைய எண்ணம். அது நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.