திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாள் நிகழ்ச்சி வெப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் அரசியல்துறை சார்ந்தவர்கள், பல திரைத்துறை நடிகர்கள் கலந்துகொண்டனர். சத்யராஜ், ராஜேஷ், மயில்சாமி, மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜின் பேச்சு மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. அவர் எப்போதும் தன்னை எம்ஜிஆர் ரசிகர், பெரியார் கொள்கையுடையவர் என்று காட்டிகொள்ளுபவர் என்ற கருத்து அனைவரிடமும் இருந்துவந்த நிலையில் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. அப்போது பேசுகையில்,
அரசியல் என்பது ஒரு சமூக சேவைதான். அரசியல் என்பது ஒரு சமூக சேவை என்பதை கலைஞர் அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். இப்போதான் படித்தே தெரிந்துகொண்டேன் அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தது 14வது வயதில் என்று. அந்த 14 வயது பையனுக்கு தான்கொண்ட லட்சியத்தின் மீதும் தன் கொள்கையின் மீதும், அய்யா பெரியார் அவர்களின் சுயமரியாதை கருத்துகள் மீதும் நம்பிக்கை வந்ததன் விளைவாக, தான் நம்பிய கொள்கையை காப்பதற்காக எந்த ஒரு சுயநலமும் பாராமல் களத்தில் இறங்கினாரே அதுதான் அரசியல். சமூக சேவைதான் அரசியல். 14 வயது பையன் இந்திக்கு எதிராக குரல் கொடுக்கும்போது வருங்காலத்தில் நாம் முதல்வராக வருவோம் என்ற எண்ணம் அவர் மனதில் ஒரு துளியும் இருந்ததிருக்க வாய்ப்புண்டா? 14 வயது பையனுக்கு மனதில் என்ன இருக்கும். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வாழ்க்கையே அர்ப்பணித்து தான் நம்பிய கொள்கைக்காக, தன் சுயமரியாதை கொள்கைக்காக, அப்படியே களத்தில் இறங்கி நம்ம எதிர்காலம் என்ன ஆகும், நம்ம தொழில் என்ன ஆகும்? நாம சிறைக்கு போவோமா? மாட்டோமா? அதை பற்றி எல்லாம் கவலைபடமால் வருவதற்கு பெயர்தான் அரசியல். அதுதான் சமூகசேவை. திட்டம்போட்டு கணக்குப்போட்டு வருவதற்கு பெயர் அரசியல் அல்ல. அதற்கு பெயர் வியாபாரம் பிசினெஸ். பிசினஸ் என்றால் என்ன? சிம்பிளா சொல்லப்போனால் இப்ப வேப்பேரியில் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்'னு வெச்சுக்கோங்க என்ன திட்டம் போடுவோம். இங்க சைவம் ஹோட்டல் நல்லா போகுமா இல்ல அசைவம் ஹோட்டல் நல்லா போகுமா? ஏற்கனவே சைவம், அசைவம் இருக்கிறது ? இல்ல சைனீஸ் போடலாமா? இங்க என்ன மாதிரி வியாபாரம் ஆரம்பித்தால் வியாபாரம் நடக்கும். இங்க ஏதாவது ஹோட்டல் மூடி வெற்றிடம் இருக்குதா? அப்படி என்று கணக்குப்போட்டு வருவதற்கு பெயர்தான் பிசினெஸ். அது அரசியல் அல்ல எனவே அந்த பிசினெஸ்க்கு நாம் ஏதோ ஒரு பெயர் வைக்ககூடாது. அது பிசினெஸ் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் என்றால் அப்படியே களத்தில் குதிக்க வேண்டும். ஒரு அநீதி நடக்கிறது என்றால் அப்படியே உள்ளே இறங்குவதற்கு பெயர்தான் அரசியல். நீங்க பிசினெஸ்க்கு உள்ளே வந்துவிட்டு அதற்கு ஏதோ ஒரு பெயர் வைக்ககூடாது. அந்த பிசினெஸ்க்கு பெயர் ‘ஆன்மீக அரசியல்’. நான் நினைத்த வரைக்கும் ஆன்மீகம் அப்படி'னா எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ‘இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மீக அரசியல் அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதுதான் ஆன்மீக அரசியல் இதுதான் ஏதோ எனக்கு தெரிந்தது. நாம் என்ன நிம்மதியை தேடி மலைக்கெல்லாமா போறோம். நம்மளுக்கு தெளிவா இருக்கு நாம் பெரியார் திடலில் படித்தவார்கள். நான் இப்பவே நிம்மதியாகதான் இருக்கேன். காலையில் பல் விளக்கும்பொழுது நிம்மதியாக விளக்குவேன். டிபன் சாப்பிடும்போது நிம்மதியாக சாப்பிடுவேன். எல்லாம் அய்யா கொடுத்த அறிவு, தந்தை பெரியார் கொடுத்த அறிவு. ஒரு பஞ்ச் டயலாக் கூட அய்யா பெரியாரை வைத்துதான் பேசுவேன். அது என்னவென்றால் தலையில் முடி இல்லை ‘'நாங்கள் எல்லாம் தலைக்கு மேலே இருக்கிறத நம்பி வாழ்றவாங்க அல்ல தலைக்கு உள்ள இருக்கிறத நம்பி வாழ்றவாங்க’' ஏனென்றால் தலைக்கு மேலே இருப்பது ஜெனிடிக்ஸ். எங்க தாய்மாமனுக்கு முடி இல்லை, அப்பாவுக்கும் முடி இல்லை அப்ப எனக்கும் முடி இருக்காதுதில்ல. ஆனால் உள்ள இருப்பது அய்யா கொடுத்தது. ''அது கொட்டாது வளர்ந்து கொண்டுதான் இருக்கும்'' என கூறினார்.