நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் தயாராகி வந்த நேரத்தில், அவர்களில் பல பேருக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. அம்மாநிலங்களுக்கு சென்றுவர பொருளாதார சூழல் பல மாணவர்களுக்கு இல்லை என்பதால் தமிழகத்திலேயே தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கும், அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் தலா ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி,
தமிழகத்தில் படித்த பிள்ளைகளுக்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எனது கண்டனத்தை முதலில் பதிவு செய்கிறேன். தமிழக அரசு முறையாக அணுகி, உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் நிலையை மாற்றியிருக்கலாம்.
ரயில் டிக்கெட் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. பிள்ளைகளை வெளி மாநிலங்களுக்கு தனியாக அனுப்பவும் முடியாது. ரயில் டிக்கெட் மட்டும் போதுமா? அங்கு சென்று அறை எடுத்து தங்க வேண்டும். அதற்கான செலவு குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் ஆகும். மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என்பது போதாது. தங்குவதற்கான செலவு, உணவுக்கான செலவுகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.
மேலும், இங்கிருந்து அந்த மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு மொழி தெரியாது. ஒரு ஏழை மாணவன் மருத்துவராகக் கூடாதா? ஏன் இந்த நீட் தேர்வில் இவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள். சாதாரண அரசு பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளின் நிலைமையை நினைத்து பாருங்கள். சாதாரண கிராமங்களில் இருக்கும் அரசு பள்ளியில் படித்த குழந்தையை ராஜஸ்தானில் போய் தேர்வு எழுதிய சொன்னால் அந்த குழந்தையின் மனம் எப்படி இருக்கும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு கொடுக்கும் உதவித் தொகை போதாது. பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்களை நினைத்துப் பாருங்கள். தினக்கூலி வாங்குபவர்கள் தங்களது பிள்ளைகள் டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு காணக் கூடாதா? பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள மாணவர்களை பொறுத்த வரையில் நீட் தேர்வுக்கு உண்டான முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறதான் முடியவில்லை. இனி தமிழக மாணவர்கள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதவாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.