இந்தியாவில் சாதி என்பது ஒன்றின்மீது ஒன்று பொருந்தி சிக்கலான இறுகிய அமைப்பாக உள்ளது என்கிறார் பொதுவுடைமை பிதாமகன் கார்ல்மார்க்ஸ் அவர்கள்.
மேற்கத்திய நாடுகளில் சாதி என்பது வர்க்க அடிப்படையில் உள்ளது. பணம் உள்ளவன் உயர்ந்த சாதி. பணம் இல்லாதவன் தாழ்ந்த சாதி. ஆனால், இந்தியாவில் சாதி என்பது வர்க்க வேறுபாடு மட்டுமல்ல. தொழில், பொருளாதார, சமூக, பண்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகளை கொண்டு அதிலிருந்து வெளிவரவே முடியாதபடி மனிதர்களை சுற்றி பின்னிப் பிணைத்துள்ளது.
சூத்திரன் என்ற வடமொழி சொல்லுக்கு கடினமான வேலைகள் செய்து வாழ்வின் வறுமையை விரட்டுபவன் என்று பொருள் சொல்லப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி மனுநீதியை பொறுத்தவரை பெண்களை ஓட்டுமொத்தமாகவே சூத்திரர்களாகத்தான் சித்தரிக்கிறது. அதனால்தான் அவர்களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது.
கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக பங்கேற்பு, அரசியல் என்று எவற்றிலிருந்து யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ, அவர்களுக்கு அவற்றில் சிறப்பு வாய்ப்புகளை அளிப்பதன் மூலம், பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ஏற்றத்தாழ்வினை முற்று முழுதாக களைய முயலும் முயற்சிக்கு பெயர்தான் சமூக நீதி.
ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் மூத்த முதல் தொல்குடியான தமிழ்க்குடியில் சாதி என்பது இடை வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மன்னர்களை கரிகால் வளவன், பாண்டிய நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், அருண்மொழிச் சோழன், அரசேந்திரச் சோழன் ஆகியோரை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைக்க முடியாமல் இன்றளவும் தடுமாறிவருகின்றனர் சாதியவாதிகள். சாதி என்பது தமிழ்ச் சொல் இல்லை. சாதி பார்ப்பவன் தமிழனே இல்லை என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதிதாசன்.
தமிழ் முன்னோர்கள் பலரும் பல்வேறு வழிகளில் சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகநீதிக்கு இலக்கணம் வகுத்தது தமிழ்மறை. அதை அடியொற்றியே வள்ளலார், அயோத்திதாச பண்டிதர், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்டோர் சனாதன கொடுமைக்களுக்கு எதிராக போராடினர். பிற்காலத்தில் பெரியாரும் அதற்காக தீவிரமாக போராடினார். ஆனால் பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் தங்களது ஆட்சி அதிகார பதவிகளை காப்பதற்காக பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அதற்கு எதிராகவும் செயல்பட்டதன் விளைவு தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழகத்தில் சமூகநீதி என்கிற சொல்தான் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உட்படச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு நலத்திட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத்தர சரியான கவனம் செலுத்தவில்லை. சமூகத்தில் சாதாரண மக்களுக்கு நடக்கின்ற அனைத்து தீமைகளுக்கும் தீர்வு காண்பதே உண்மையான சமூக நீதியாகும். இதை சாதி மறுப்பு, பெண் விடுதலை, இடஒதுக்கீடு என சுருக்கிவிட்டார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள். சுயமரியாதை என்று பேசிக்கொண்டு பதவிக்காக காலில் விழுவதும் குனிந்தே செல்வதும் திராவிட திருவாளர்களின் செயல்களாக நாம் பார்க்கிறோம்.
சாதியை ஒழித்த கட்சிகள் எனக் கூறிக்கொண்டு சாதிய அமைப்புகளை உருவாக்கி அதைக் கொண்டு தேர்தல் அரசியல் செய்வதைப் பார்க்கிறோம். சனநாயகத் தேர்தலைப் பணநாயகத் தேர்தலாக மாற்றியது இந்த திராவிடக்கட்சிகளே. சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது, பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பது, பணத்தைக் கொடுத்து வாக்கை ஒரு பண்டமாக மாற்றியது, முதல் போட்டு இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி சாமானியர்கள் அரசியலில் நுழைய முடியாதவாறு பணமுதலைகளுக்கான இடமாக மாற்றி வைத்துள்ளார்கள். இதில் நாம் தமிழர் கட்சியின் சமூக நீதி செயல்பாடுகள் எப்படியுள்ளது எனப்பார்ப்போம்.
வெற்று முழக்கமாக உள்ள பெண்களுக்கான 33 விழுக்காட்டைக்கூட திராவிடக் கட்சிகள் வழங்காத நிலையில் நாம் தமிழர் கட்சி இந்தியாவிலேயே முதல்முறையாக ஐம்பது விழுக்காடு என அறிவித்து கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 40 தொகுதிகளில் 20 இடங்களைக் கொடுத்தது. இப்போது நடக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளில் சரிபாதி 117 தொகுதிகளை படித்த இளம் பெண்களுக்கு ஒதுக்கி களமாட வைத்துள்ளது.
பொதுத் தொகுதிகளில் ஒரு இடத்தைக்கூட பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்காத திராவிடக் கட்சிகள் சமூகநீதி பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். நாம் தமிழர் கட்சி பொதுத் தொகுதியில் 16 பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சாதி பார்த்து நீ வாக்களித்தால், உன் ஓட்டு எனக்கு தீட்டு என மேடையிலேயே அறிவிக்கிறார் சீமான். தமிழ்ச் சமூகத்தின் தொல்குடியான குறவர்கள், கோயில் பணி புரியும் பண்டாரங்கள், மண்பாண்ட தொழில் செய்யும் குயவர்கள், சலவைத் தொழில் செய்யும் வண்ணார்கள், மருத்துவ குடிகளான நாவிதர்கள், ஆசாரிகள் என காலகாலமாக திராவிடக் கட்சிகளால் கண்டுகொள்ளப்படாத தமிழ்க் குடிகளைத் தேடிப்பிடித்து அவர்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கச்செய்ய வேட்பாளராக நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலிலும் நிறுத்தியுள்ளது.
ஐந்நூறு, ஆயிரம் என்று உதவித்தொகைகளுக்குக் கையேந்த வைக்கும் நிலையை மாற்றி அவர்களுக்கான உரிமைகளைப் பெறச்செய்வதே உண்மையான பெண்கள் முன்னேற்றமாக இருக்க முடியும். அதிலும் சமூகம், பொருளாதாரம் என அனைத்து உரிமைகளையும் வழங்கும் அதிகார மையங்களான சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் அவர்களுக்கான சமவாய்ப்பைப் பெறச் செய்வதன் மூலம் தங்களுக்கான அனைத்து உரிமைகளையும் தாங்களே திட்டமிடவும், சட்டமிடவும் முடியும் என்பதால் நாம் தமிழர் கட்சி அத்தகைய மாற்றத்தை இந்த மண்ணில் சாத்தியப்படுத்த முனைகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்ந்து கிடப்பது கல்வி என்றால் இடஒதுக்கீடு மூலம் அதனைக் கொடுத்து விடலாம். பொருளாதாரத்தை வேலைவாய்ப்பின் மூலம் பெற்றுவிடலாம். ஆனால் அவர்கள் உண்மையாக வீழ்ந்துகிடப்பது உயர் சாதி எனச் சொல்லப்படுவோரின் மனங்களில். எனவே அங்கேயிருந்து அவர்களை உயர்த்தும் உன்னத நோக்கத்தோடு தான் பொதுத்தொகுதியில் அதிக அளவில் ஆதித்தமிழர் என்ற புதிய புரட்சிகர வரலாற்றை நாம் தமிழர் படைத்துள்ளது.
ஆகவே நாம் தமிழர் கட்சியின் சமூகநீதி என்பது ஆண்டாண்டு காலமாய் அடிமைபடுத்தபட்டிருக்கும் மக்களை, சலுகைகள் என்ற பெயரில் வெறும் வாக்குவங்கிகளாக மட்டுமே பயன்படுத்தும் திராவிடக் கட்சிகளை போல் அல்லாது, அவர்கள் ஒடுக்கப்படுவதற்கான உண்மையான காரணங்களான சமூக சிக்கல்களின் வேர்களை கண்டறிந்து அதனை களைய முயலும் நேர்மையான செயல்பாடாகும். நாம் தமிழரின் தமிழ்த்தேசிய அரசியல் அதனை உறுதியாக இந்த மண்ணில் சாதிக்கும்.