Skip to main content

மருத்துவக் கல்லூரிக்காக முதல்வர் எடப்பாடியிடம் பணிகிறாரா எ.வ.வேலு? -கட்சியில் விவாதம்!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

E. V. Velu

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏக்களாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாவட்ட ஆய்வுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தார். இந்த நிகழ்வுக்கு வருகை தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தி.மு.க எம்.எல்.ஏக்களை அழைத்தனர். அன்றைய தினம், தி.மு.க. பொதுக்குழு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. ஆனால், தி.மு.கவில் கழக பொதுச்செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள் தேர்வு நடைபெற்றதால் முதல்வர் நிகழ்ச்சியில் யாரும் கலந்து கொள்ளவில்லை.


இந்நிலையில், முதல்வர் வந்துசென்ற இரண்டு தினங்களுக்கு பிறகு (செப்டம்பர் 11) திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ.விடமிருந்து ஓர் அறிக்கை வெளிவந்தது. அதில், திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கிதந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக்கல்லூரி, பால்பவுடர் தொழிற்சாலை, செய்யாறு சிப்காட், ஆரணியில் பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரிகள், போக்குவரத்து மண்டலம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்டம் முழுவதும் உழவர் சந்தைகள், சமத்துவபுரங்கள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.


திருவண்ணாமலை நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்ககூட நிதியில்லை. நகர் முழுவதும் ஆங்காங்கே தெருவிளக்குகள் எரியாமல் இருண்டு காணப்படுகிறது. சாத்தனூர் அணையில் இருந்து நகருக்கு வரும் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 55 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் பெண்கள் ரோட்டில் நின்ற அவலநிலையே நிலவியது. புதிய பேருந்து நிலையம் அமைக்க இன்று வரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. நிதி இல்லாத காரணத்தினால் தினியார் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு நெடுஞ்சாலைதுறையால் நிதி கோராப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சாலைகள் பழுதடைந்தும், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பொதுப்பணித்துறையிலும் அதே நிலைதான். அரசு அலுவலகங்களோ பல இடங்களில் சரியாகவும், பாதுகாப்பாகவும் இல்லை. மாவட்ட வளர்ச்சிப் பணி கடந்த 10 ஆண்டுகளாக இந்நிலையில் உள்ளது.

 

E. V. Velu


தற்போது கரோனா என்ற கொடிய நோய் உலக நாடுகளில் குறிப்பாக தமிழகத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது. எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் வசதியே இல்லை, கழிவறைக்கு செல்பவர்கூட பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்லும் அவல நிலையே உள்ளது. முதல்வர் கிரிவலம் சென்றும், அ.தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்தார். ஆனால் கரோனா நோய் குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தியும், எவ்விதமான பலனும் மாவட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை, திருவண்ணாமலை மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்களும் எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சியது.

 

E. V. Velu

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார் என காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, பொதுமக்களை நடமாடவிடாமல் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதுதான் மிச்சம். கரோனா பரவலை தடுக்க விளம்பரங்கள் செய்யப்பட்டது. அ.தி.மு.க கட்சிக்காரர்கள் முதலமைச்சர் வருகிற வழியில் திட்மிட்டு லாரி, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆட்களைக் கும்பல் கும்பலாக கொண்டு வந்து வேடிக்கை பார்க்க வைத்தது தான் சமூக இடைவெளியைப் பின்பற்றும் லட்சணமா? முதலமைச்சரின் வருகை எந்த விவசாயிக்கும் பயனில்லை, பொதுமக்கள் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

E. V. Velu


இந்த அறிக்கை தான் தற்போது மாவட்ட தி.மு.கவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுப்பற்றி நம்மிடம் பேசியவர்கள், அறிக்கையோ, பேட்டியோ எதுவாக இருந்தாலும், தவறு உள்ளது எனச்சொல்லி தன்னை யாரும் எதிர்க் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக கருத்து தெரிவிப்பார் வேலு. ஆனால் இந்த அறிக்கையில் சில பிழைகளைச் செய்துள்ளார். அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்ட அதேநேரத்தில், முதல்வர் அந்தச் சாலையைக் கடந்ததும் சாதாரணமாகவே விடப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து நெரிசல் என்பது இல்லாத ஒன்றாகவே இருந்தது என்பது அனைவரும் அறிந்தது. அதேபோல் மாவட்டம் பிரிப்பு, மருத்துவக்கல்லூரி அமைப்பு என பலவற்றை இந்த மாவட்டத்துக்காக கழகம் செய்தது என சுட்டிக்காட்டிய வேலு, திராவிட முன்னேற்றக் கழகம் தான்செய்தது என்கிற வார்த்தையை அறிக்கையில் எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை. அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் வார்த்தைகளைக் கவனமாக அமைப்பார், ஒருமுறைக்கு நான்கு முறை அந்த அறிக்கையை திருத்தம் செய்வார். அறிக்கையில் கலைஞர் பற்றி, தலைவர் ஸ்டாலின் பற்றி, தி.மு.க என்கிற வார்த்தைகள் வருவதுபோல் பார்த்து அறிக்கை தருபவரிடம் இப்படியொரு அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றார்கள்.

 

Ad

 


இப்படி பிழைகளோடு வந்துள்ள இந்த அறிக்கை தான் பத்திரிகைகள் சொல்வது போல், தனது அருணை மருத்துவக் கல்லூரியின் அனுமதிக்காக முதல்வரை சந்தித்தார். அவருடன் நெருக்கமாக உள்ளார் என்பது உண்மையோ என்று தோன்றுகிறது. மேலும் தனக்கு பதவி தரவில்லையோ என கட்சி தலைமை மீதுள்ள அதிருப்தியில் இருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது என்றவர்கள், செப்டம்பர் 3ஆம் தேதி எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் சேலம் குள்ளம்பட்டியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்துக்கு எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த 7 எம்.பிக்களை அழைத்துள்ளனர். இதில் சேலம் பார்த்திபன், தருமபுரி டாக்டர் செந்தில்குமார் உட்பட 6 பேரும் கலந்துகொண்டனராம். திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை வருகிறேன் எனச்சொன்னவர் அன்றைய தினம் உடல்நலம் சரியில்லை எனச்சொல்லி கலந்துகொள்ளவில்லையாம். முதல்வர் எடப்பாடியுடன் நல்ல நெருக்கத்தில் வேலு இருப்பதால் தான் அண்ணாதுரையை அனுப்பவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை நிரூபிப்பது போலவே இந்த அறிக்கையும் அமைந்துள்ளது என்கிறார்கள் தி.மு.க வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே.