Skip to main content

கலைஞரே! தியானம் கலையுங்கள்!

Published on 03/06/2018 | Edited on 03/06/2018
kalaignar



மனம் பின்னோக்கி விரைகிறது. ஆண்டுகளின் நெரிசலில் விறுவிறுப்பாய் நுழைந்து, 1924-ஆம் ஆண்டை இனம் கண்டுப் பூரிக்கிறது. 

அந்த ஆண்டின் கதவு திறந்து மாதங்களின் ஊடே வகிடெடுத்துச் சென்று, ஜூன் 3 ஆம் நாளை பூரிப்பாய்த் தரிசித்து மனம்,  மனம் உருகுகிறது. அந்த வைகறை நாளைப் புத்தி புல்லரிப்போடு இருகை கூப்பி இதமாய் வணங்கி நெகிழ்கிறது.

95 ஆண்டுகளுக்கு முன்பான அந்த நாள், கருணை காட்டத் தவறியிருந்தால், தமிழகம் கலைஞர் எனும் அந்த மாதலைவனைக் கண்டிருக்காது. அந்த வைகறைத் தலைவனின் வெளிச்சத்தைத் தரிசிக்காமல், தமிழகம் இன்னும் இருளடைந்த  மண்ணாகவே இருந்திருக்கும்.

*
திருக்குவளை என்னும் குக்கிராமத்தில் பிறந்து, திருவாரூர்த் திருநகரில் வளர்ந்து, சேலம், கோவை என திரைப் பணிகளுக்காக மெல்ல மெல்ல நகர்ந்து, ஈரோட்டுப் பாசறையில் நுழைந்து, காஞ்சிபுரத்தின் அறிவுவாசலில் அமர்ந்து, தமிழகத்தின் அரசியல் அரியணையில் அசைக்க முடியாத தலைவனாக வீற்றிருந்தபடி, தனது 75 ஆண்டுகாலப்  பொதுவாழ்வைக் கடந்திருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்.  இவரைப் போன்ற ஒரு சிகரத் தலைவரை, எட்டுத் திசைகளையும் சலித்தாலும் எட்டிப்பிடிக்க முடியாது. 

அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டு,  திராவிட இயக்கப் பிரச்சாரத் திருப்பணியில் தன்னைக் கரைத்தபடியே, தி.மு.க.வின் தலைவராக அமர்ந்தவர் கலைஞர். அவரது அரசியல் சாதனைகளையும் ஆட்சியியல் சாதனைகளையும் பட்டியலிடவேண்டுமானால், பல ஆண்டுகளை பரவசமாய்ச் செலவிட நேரும்.
இந்தி எதிர்ப்புக் களத்தில் களமாடிய கலைஞரின் வீறுமிகும் வேகம்தான், இன்றும் தமிழ் மொழிக்கு அரணாகத் திகழ்கிறது. கல்லக்குடியும், பாளையங்கோட்டையும் கலைஞரின் வரலாற்றுத் துறைமுகங்களாய், இன்றும் நினைவலைகளை வீசி நெஞ்சம் நனைக்கிறது.  

*
57ல் முதல் முதலாகக் குளித்தலையில் தேர்தல் களம்கண்ட கலைஞர், மொத்தம் 13 முறை, தேர்தலைச் சந்தித்திருக்கிறார். அத்தனை முறையும் வெற்றிபெற்று, இப்படியோர் தலைவனா? என வெற்றி தேவதையின் தோள் சாய்ந்து வரலாற்றையே வியக்கவைத்திருக்கிறார். ஏறத்தாழ 60 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக, தனது பொழுதுகளை மதிப்பாய்ச் செலவிட்ட மா தலைவர் அவர்.

அவர் ஆட்சியில் இருந்தபோது, கண்ணொளித் திட்டம், கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்று ஆரம்பித்து 108 ஆம்புலன்ஸ் திட்டம் வரை வியத்தகு மக்கள் நலத்திட்டங்கள் அணிவகுத்தன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றியதோடு, தமிழுக்குச் செந்தமிழ் மகுடத்தையும் சூட்டியவர் கலைஞர். 

புணரமைக்கபட்ட பூம்புகார், வள்ளுவர்க் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, குமரி முனையில் வானளாவிய வள்ளுவர் சிலை என்றெல்லாம் கலை நுணுக்கப் பண்பாட்டுச் சின்னங்களை நிர்மாணித்த வரலாற்று நாயகன், நம் ஆரூர் நாயகனே.

 

kalaignar



*
20 வயதிலேயே ஜுபிடர்ஸ் தியேட்டர் நிறுவனத்தில் பேனா பிடித்து, 

ராஜகுமாரி, அபிமன்யூ. மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் தன் விரலின் வீரியத்தைத் திரைமறைவில் காட்டி,  பின்னர் பராசக்தி, மந்திரிகுமாரி என 40 படங்கள் வரை வீறுமிகும் தமிழால் வசன வித்தகம் காட்டி, தமிழர்களின் நாவில் தமிழன்னையை நடனமாட வைத்த தனிபெரும் கலைஞனும் அவர்தான்.  திரைப்பாடல்கள் மூலமும் தமிழுக்குத் திருவிழா நடத்திய கலைஞர்,  குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியப் பூங்கா, ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம் என எண்ணற்ற நூல்களாலும் அன்னைத் தமிழழுக்கு ஆரங்கள் சூட்டிய அறிவாளர் ஆவார். அறிஞர்களையும் புலவர்களையும் கவிஞர்களையும் போற்றிய குடிமக்களின் கோன் அவர். கவியரங்குகளை மக்கள் மன்றத்திற்கு அழைத்து வந்த  கவிஞர்களின் காதல் நாயகன் அவர்.    மாநில உரிமைகளைக் காக்க  மத்திய அரசோடு அவர் நடத்திய போராட்டங்கள், அரசியல்வாதிகள் கற்கவேண்டிய அரியபாடங்களாகும். சனாதனவாதிகளோடும், சர்வாதிகாரிகளோடும் சளைக்காது போரிட்ட சரித்திர நாயகரும் கலைஞரே.

*
தன் நாவையும் பேனாவையும் ஆயுதங்களாக ஆக்கிக்கொண்டு களமாடிய அந்த வரலாற்று நாயகர், இன்று, பேசமுடியாமலும் எழுத முடியாமலும் முதுமையெனும் வனாந்தரத்தில் தியானம் மேற்கொண்டிருக்கிறார். அவரது மெளனத்தையும், வெற்றிடத்தையும்  சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருக்கிறது தமிழகம். அவரால் தடுக்கமுடியாது என்ற தைரியத்தில் தமிழகத்தின் வரலாற்றைக் கோமாளிகள் சிலர் கோணல் மாணலாக இருளில் நகர்த்திகொண்டிருக்கிறார்கள்.

தனது பழுதை நீக்கிக்கொள்ள தமிழகத்தின் கண்கள் கலைஞரைத்தான் தேடுகின்றன. கலைஞரே, தியானம் கலையுங்கள் என எங்கள் இதயம் ஈரக்குரலில்  இறைஞ்சுகிறது.

’இம்மை மாறி மறுமையாயினும் 
நீயாகியரென் தலைவனை 
யாமாகியர் நின் 
நெஞ்சு நேர் உடன்பிறப்புகளே’-என கலைஞரை எண்ணி இதயம் நெகிழ்ந்துகரைகிறது.
கலைஞரே, மீண்டு வந்து மீண்டும் ஆள்க! நாங்கள் சிறக்க நீடு வாழ்க!
 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.