Skip to main content

அன்று டேனிஷ் சித்திக்; இன்று ஷிரீன் அபு அக்லே - அதிகாரப் பசிக்கு இரையான பத்திரிகையாளர்!

Published on 12/05/2022 | Edited on 13/05/2022

 

 journalist incident during Israeli raid

 

1997- ஆம் ஆண்டு, தனது 26- வது வயதில் போர்க்களத்தில் இறங்கிய அப்பெண்ணுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பிற்காலத்தில் நமது வாழ்வு ஒரு நித்திய சுடர் ஆகும் என்று. இன்று, அவரது 51 ஆவது வயதில் வீழ்ந்தாலும், அவரது போராட்ட குணத்தாலும், அநீதிக்கு எதிராக தனது குரலாலும் கம்பீரமாக நிற்கிறார், நிற்பார்.

 

'PRESS' என்ற வாக்கியத்தை, நீதிக்கான கடமையை ஏந்தும் அனைவரது இதயத்திலும், அவர்கள் சந்தித்த துயரங்கள் ஒரு வடுவாக வாழ்ந்து கொண்டிருக்கும். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், ஆபத்துகள் வீற்றிருக்கும் பாதையில் வீறுநடை போட்டு, குண்டு மழை பொழியும் போர்க்களத்தில் நின்று உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்கள் என்றுமே மடிவதில்லை.

 

தலிபான்களால் கொல்லப்பட்ட இந்திய புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திக் அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது, நாம் மற்றொரு மகத்தான பத்திரிகையாளரை இழந்திருக்கிறோம். 51 வயதான அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்ரேலிய படையால், பாலஸ்தீனத்தில், சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்.  மே 3- ஆம் தேதி, தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிரீன் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என யார் தான் அறிந்திருந்தோம்? போராட்ட குணம் நிறைந்த இதயங்கள், பிறந்த நாளுக்கோ, இறந்த நாளுக்கோ எதற்கும் தயாராகத்தான் இருக்கின்றன.

 

இரண்டு தசாப்தங்களாக போர்க்களத்தில் வாழ்ந்த ஷிரீன், தன்னை எப்போதேனும் தோட்டாக்கள் தாக்கும் என நிச்சயமாக யூகித்திருப்பார். இருந்தும், தனது தோளில் சுமந்தப் பணியை, நீதிக்கான குரலை அவர் எப்போதும் இறக்கி வைத்ததில்லை. ஜெருசலேத்தில் பிறந்த ஷிரீன், பிற்காலத்தில், அரேபிய உலகில் மிகப் பிரபலமான பெண் பத்திரிகையாளராக உயர்ந்து நின்றார். 1997- ல் அல் ஜஸிராவில் பயணிக்க தொடங்கிய ஷிரீன், பாலஸ்தீன அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்கும் பொழுது, இஸ்ரேலிய படையின் தோட்டாக்களுக்கு இரையாகி இருக்கிறார்.

 

சிறிய உலகில் ஒரு நெடும் பயணமாக அது இருந்தாலும், ஆயுதங்களுக்கு எதிராக தனது வலிமையான குரலால், பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறையை சர்வதேச சமூகத்திற்கு பறைசாற்றினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனிய மக்களின் அவலநிலையைத்  தொடர்ந்து வெளிப்படுத்தினார். இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் இறுதி ஊர்வலத்தை கா(சா)ட்சிப்படுத்தியவர், தற்போது அதே படைகளால் கொல்லப்பட்டது, அப்போர்க்களத்தின் தட்பவெப்ப நிலையை நமக்கு ஆவணப்படுத்தியிருக்கிறது.

 

பத்திரிக்கைத் துறையில் தான் செய்த அளப்பரிய பணி, பாலஸ்தீனிய அகதிகளுக்கு தான் ஆற்றிய சேவை, மற்றும் மற்ற அரேபியர்களும் பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க அவரின் உந்துதல் ஆகியவை மூலமாக ஷிரீன் அவரை வீழ்த்திய தோட்டாக்களை தோற்கடிப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பயங்கரவாதத்தால் பலியான சவுதியின் ஜமால் காஸோக்கி, இந்தியாவின் டேனிஷ் சித்திக், கவுரி லங்கேஷ் போன்றோரின் வரிசையில், ஷிரீனும் பலியாயிருக்கிறார்.

 

வீழ்வது நாமாயினும் வாழ்வது நாடாகட்டும் என்பதுபோல, தான் வீழ்ந்தாலும், தன் பங்களிப்பின்மூலம் மக்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பார். "அழிவின் அளவையோ அல்லது மரணம் சில சமயங்களில் நெருங்கிவிட்டது என்ற உணர்வையோ என்னால் மறக்கவே முடியாது." - ஷிரீன் 2002- ஆம் ஆண்டு உதிர்த்த வார்த்தைகள் இவை. இந்தாண்டு தொடக்கத்தில், அல் ஜசீரா, ஷிரீனின் 25- வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஒரு காணொளி வெளியிட்டது. அதில் ஷிரீனின் பேச்சு மறக்கமுடியாதவை, "கடினமான காலங்களில், நான் பயத்தை வென்றேன். யதார்த்தத்தை மாற்றுவது கடினமாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் அந்த குரலை உலகிற்கு கொண்டு வர முடிந்தது" என கூறினார்.

 

ஷிரீனின் குரல் எப்பொழுதும் மக்கள் படும் துன்பங்களின் குரலாகவே இருந்திருக்கிறது. அவர்களின் சுதந்திரத்திற்கான, விடுதலைக்கான நம்பிக்கையாய் இருந்தது. கண்ணீர் துடைத்த கைகளை, தற்போது தோட்டாக்கள் துளைத்துவிட்டது. ஆனால், தோட்டாக்கள் தோற்றுப்போகும், ஆயிரம் ஷிரீனின் எழுச்சியினால். பயங்கரவாதமும் தோற்கும். அது தோற்பதற்கு தாமதமாகும், ஆனால் இறுதியில் வீழும். அதற்கு நம் கண்முன் இருக்கும் தற்போதைய சாட்சி இலங்கை.

 

ஷிரீன் வீழ்த்தப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.

 

- அழகு முத்து ஈஸ்வரன் 

 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.