உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை மின் விளக்குகளை அணைத்துவிட்டு, 9 நிமிடங்கள் விளக்குகளை எரிய விடுங்கள் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பத்தரிகையாளர் கோவி.லெனினிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு, 9 நிமிடங்கள் விளக்குகளையோ அல்லது டார்ச் லைட்டையோ ஒளிர விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதன் மூலம் நம்முடைய ஒன்றுமையை கொரோனாவிற்கு எதிராக காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமரின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
உலக நாடுகளே பார்த்து பயப்படுகின்ற கரோனா, பிரதமரின் அறிவிப்பை பார்த்து பயந்து ஓடிவிடும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர் ஜனதா கர்பியூ என்ற பெயரில் நடத்திய ஊரடங்கின்போது, மக்கள் எல்லாம் இரவு ஒன்பது மணிவரை வீட்டில் இருங்கள் என்று சொன்னார். பிறகு இந்தியாவில் இருக்கும் மக்கள் எல்லாம் மாட மாளிகைகளில் வாழ்வது போன்று, மாலை 5 மணிக்கு பால்கனியில் வந்து கைத்தட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அன்றைக்கு நாம் ரோட்டுக்கு வந்தோம், சங்கு ஊதினோம், இன்னைக்கே கரோனா முடுஞ்சிருச்சுனு பால் ஊத்தினோம். அன்றைக்கே பாதி கரோனா நாட்டை விட்டு ஓடிவிட்டது. தற்போது மீதி இருக்கின்ற கரோனாவை விரட்டத்தான் இந்த விளக்கை ஏற்ற சொல்கிறார்கள்.
பிரதமர் பகலில் பேசுகிறார் என்பதே பெரிய ஆச்சரியம். அவர் எப்போதும் இரவில்தான் பேசுவார். அவர் எட்டு மணிக்கு பேச ஆரம்பித்தால் நமக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது என்று அரத்தம். தற்போது கரோனாவை விரட்ட ஒரு தேதி சொல்லியிருக்கிறார். அந்த தேதியில் நாம் நம்முடைய வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு இருப்போம். இன்றைக்கு பிரதமர் பேசப்போகிறார் என்றதும் ஏதோ எமர்ஜென்சியை அறிவிக்க போகிறாரோ? அல்லது இன்னும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க போகிறாரோ என்றுதான் நினைத்திருந்தோம். அல்லது நிர்மலா சீதாராமன் அறவித்த திட்டங்களை பற்றி கூடுதல் அறிவிப்புக்களை சொல்வாரோ என்று நினைத்திருந்த நிலையில், இந்த விளக்கு மேட்டரை பற்றி சொல்லியிருக்கிறார்.