EPS - OPS, 10 அமைச்சர்களுக்கு இடமில்லை: தங்க தமிழ்ச்செல்வன் (EXCLUSIVE)

சட்டசபையில் காட்சிகள் மாறும். அதில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். மற்றும் 10 அமைச்சர்களுக்கு இடமில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:-
மாவட்டச் செயலாளர்கள் ஆறு பேரை நீக்கியிருப்பதாக அறிவித்துள்ளார்களே?
கேனப்பய ஊர்ல கிறுக்குப் பய நாட்டாமையால்ல இருக்கு என்று எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. பந்தியிலேயே இடமில்லைன்னு சொன்னா, கிழிஞ்ச இலையா இருக்குன்னு சொன்னா எப்படி. இவர்கள் யார் எங்களை நீக்குவதற்கு. கட்சி எங்களுக்குத்தான் என்று பொதுச்செயலாளரும், துணைப்பொதுச்செயலாளரும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. வழக்கு விசாரணைக்கு வரும். அப்போதுதான் கட்சி யாரிடம் இருக்கிறது என்று தெரிய வரும். நான் அம்மாவால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர். என்னை நீக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. என்னை நீக்க வேண்டும் என்றால் பொதுச்செயலாளர்தான் நீக்க வேண்டும். அதுதான் எங்க கட்சி பைலா. அவர்கள் நடத்திய பொதுக்குழுவே செல்லுமா, செல்லாதா என்று கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அதையும் மீறி இப்படி அறிக்கைவிட்டால், நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று சொல்வது போல இருக்கிறது. கோர்ட் அவமதிப்பு வழக்கு போடுவோம்.
மூன்று மாதத்தில் ஆட்சி கலையும் என்று தினகரன் கூறுகிறார். சில எம்எல்ஏக்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தீர்கள். ஆட்சி மாற்றம் வருமா? சட்டமன்றத்தில் காட்சி மாறுமா?
ஆட்சியை கலைக்கிறோமா.. மாறுமா என்பதெல்லாம் பொதுச்செயலாளரும், துணைப்பொதுச்செயலாளரும் எடுக்கக் கூடிய முடிவு. ஆட்சி மாற்றம் என்றால் இப்போது உள்ள முதல் அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் இருக்க மாட்டார்கள். 10 ஊழல் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இருக்க மாட்டார்கள். இவர்களெல்லாம் போக, நல்ல நிர்வாகத்தை கொடுக்க வேண்டும். ஊழல் இல்லாத அரசை நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் பொதுச்செயலாளரின் எண்ணம். அதன்படி மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்களை தேர்வு செய்து அமைச்சர்களாக்கி, அம்மா ஆட்சி மீண்டும் நல்ல முறையில் தொடங்கும்.

ஆமாம். காட்சி மாறும். காட்சி மாறுவதற்கு எல்லோரும் வந்துவிடுவார்கள். வந்தால்தான் எங்களுக்கு பலன்.
துரோகிகளுக்கு இடமில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணியில் உள்ளவர்களை சேர்த்தால்தானே ஆட்சி அமைக்க முடியும்?
இப்போதும் சொல்கிறோம். துரோகிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் இடமில்லை. ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இல்லாமல் ஆட்சி அமைக்க முடியும். நடத்தி காட்டுகிறோம். மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும்.
பொதுத்தேர்தலில் குக்கர் வேகாது என்று ஜெயக்குமார் சொல்கிறாரே?
குக்கர் காயிலாங்கடைக்கு போகுமுன்னு சொன்னது அவர்தான். இப்ப குக்கர் காயிலாங்கடைக்கு போனதா, கோட்டைக்கு வந்ததா?
தி.மு.க.,வும், தினகரனும் திட்ட மிட்டு செய்த, கூட்டு சதியின் வெளிப்பாடாக, தேர்தல் முடிவு அமைந்துள்ளது என பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளார்களே?
யார் நம்புவார்கள். மத்திய அரசு, மாநில அரசு, போலீஸ் படை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் போலீஸ் படை இவ்வளவும் அவர்களுக்கு ஆதரவு. மேலும் பணம் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விநியோகம் என்று உலகமே சொல்கிறது. பத்திரிகைகள் சொல்கிறது. அப்படியே நாங்கள் திமுகவோடு கூட்டணி வைத்திருந்தால், திமுகதானே வெற்றிபெற வேண்டும். ஏன் குக்கர் வெற்றிபெற்றது. திமுக தோல்வியடைய ஒத்துக்கொள்வாரா ஸ்டாலின்.
ஜெயலலிதா மீது அன்பும், பாசமும் இல்லாததால்தான் அவர் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் வெளியிட்டுள்ளார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே?
வீடியோ காட்சிகள் இருந்தால் வெளியிட வேண்டும். அதனை நாங்கள் பார்க்க தயார். தைரியம் இருந்தால் வெளியிடுங்கள் என்று சொன்னார்கள். மேடைக்கு மேடை கத்தினார்கள். சரியென்று வெளியிட்டோம். அதை கண்டு ஏன் இப்போது பயப்படுகிறார்கள். நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்.
-வே.ராஜவேல்