Skip to main content

இவர்களின் கட்டுப்பாட்டில்தான் தினகரன் இருக்கிறார்...

Published on 12/06/2018 | Edited on 13/06/2018

அ.மு.மு.க.வின் தலைமைக் கழகம் தினகரனால் கோலாகலமாகத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் உள்ள வில்லங்கங்களை அடுக்குகிறார், அ.தி.மு.க. பிரமுகர் சினி சரவணன்.
dinakaran
"சென்னை ஆலந்தூர் கக்கன் காலனி, நோபல் தெருவில் (விமான நிலையம் அருகில்) 650 ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான சத்துணவு பள்ளிக்கூடத்தையும் ஒரு நூலகத்தையும் 1982-ல் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர். அந்த இடத்தையொட்டி, கிரீன் பீஸ் ப்ரைவேட் லிமிடெட் என்கிற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் எர்ணட்ஸ்பாலுக்கு 28 கிரவுண்ட் காலிநிலம் இருக்கிறது. அந்த இடத்தில் பில்டிங் கட்டி விற்பனை செய்வதற்கு பெரிய நுழைவுவாயில் அவசியம். அதற்கு பள்ளிக்கூடம் இடையூறாக இருந்ததால், சென்னை மாநகராட்சியின் உதவியை நாடினார் எர்ணட்ஸ்பால். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் துணை நின்றனர்.

பள்ளிக்கூடத்தை தரை மட்டமாக்கியது சென்னை மாநகராட்சி. இதனால் 650 குழந்தைகளும் பாதிக்கப்பட்டதால், உள்ளாட்சித்துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கிரீன் பீஸ் நிறுவன உரிமையாளர் எர்ணட்ஸ்பால் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளது.
 

 

 

dinakaran


இதற்கிடையே, தலைமை அலுவலகம் திறந்த கையோடு அதனை பூட்டியும் வைத்துள்ளனர். தினகரன் வரும்போது மட்டுமே திறந்துவைக்க உத்தரவு போட்டிருக்கிறார்கள். அத்துடன் அவரை யார் யார் சந்திக்க வேண்டும் என உதவியாளர்களே முடிவு செய்கிறார்கள். உதவியாளர்களான ஜனா மற்றும் பிரபுவின் dinakaranகட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் தினகரன் என்கிறது கட்சியின் உள்வட்டம். இதில் தினகரனின் உறவினரான பிரபுவுக்குத்தான் அதிக அதிகாரம். முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் தவிர கட்சியின் சீனியர்கள் தொடங்கி தினகரனை நம்பி வந்த எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட யாரும் அப்பாயின்ட்மெண்ட் இல்லாமல் தினகரனை சந்திக்க பிரபு அனுமதிப்பதில்லையாம். இத்தகைய அதிருப்தியில்தான் விலகினார் நாஞ்சில் சம்பத். கட்சியின் முக்கியப் பதவிகளில் முக்குலத்தோர்களையே தினகரன் நியமித்து வருவதாலும், பெரும்பான்மை சமூகங்களைப் புறக்கணிப்பதாலும், கட்சிப் பெயரை அம்மா முக்குலத்தோர் முன்னேற்றக் கழகமாக மாற்றிவிடலாம் என்கிற அளவுக்கு சீனியர்களிடம் மனக்கசப்பு அதிகரித்து வருகிறது.

 

 


இதனையறிந்த இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் அ.ம.மு.க.வை உடைக்கும் வேலையில் ரகசியமாக இறங்கியுள்ளனர். தினகரனோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனக்கான பேனர்களிலும் போஸ்டர்களிலும், "இரண்டாம் புரட்சித் தலைவரே' என அழைக்குமாறு உதவியாளர்கள் வழியாக உத்தரவு போட்டிருக்கிறார் என குமுறுகின்றனர் சீனியர்கள்.

-இரா.இளையசெல்வன்

Next Story

சசிகலா முன்னிலையில் தினகரன் மகள் திருமணம்... கோயிலுக்குப் பதில் மண்டபம் இடம்மாறிய பின்னணி!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

jh

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனின் ஒரே மகளான ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் பூண்டி வாண்டையார் குடும்பத்தைச் சேர்ந்த துளசி வாண்டையார் பேரனுமான ராமநாதன் துளசி வாண்டையார்க்கும் செப்டம்பர் 16 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி இரு குடும்பத்தாருக்கும் இடையே திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயம் நடைபெற்றது. சசிகலா நடராஜன் முன்னிலையில் இந்த நிச்சயம் நடைபெற்றது. திருமணமும் அவரது தலைமையிலேயே நடைபெற்றது.

 

இருதரப்பின் குடும்பத்தினர் அதிகளவில் இந்த திருமணத்துக்கு வருகை தந்திருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவிற்காக செப்டம்பர் 16 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் கோயில் நிர்வாகம் சுட்டிக்காட்டி அதிகளவு கூட்டம் கோயிலுக்குள் வரவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டது. கோயிலுக்குள் திருமணத்துக்கான ஏற்பாடுகள் பல செய்யப்பட்டாலும் கூட்டம் அதிகம் வரக்கூடாது எனச்சொன்னதால் கோயிலுக்குள் திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் கோயிலுக்குப் பதில் மண்டபத்திலேயே திருமணம் வைக்கப்பட்டது. மண்டபத்திலேயே திருமணம் நடந்துமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வேலூர் தங்ககோவில் சாமியாரான சக்தி அம்மா என அழைக்கப்படும் சாமியார் தாலி எடுத்துத்தர திருமணம் நடைபெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சசிகலா தனது அண்ணி இளவரசியுடன் சேர்ந்து மணமக்களை வாழ்த்தினார். கட்சிக்காரர்களை வரவேண்டாம் எனத் தினகரன் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தாலும் ஆயிரக்கணக்கான அமமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். அதைவிட அதிகமாகத் தொழிலதிபர்கள் வருகை தந்திருந்தனர். மதியத்துக்கு மேல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த திருமணத்துக்காக வாண்டையார் குடும்பத்தினர் நகரில் உள்ள அனைத்து தகுதியான ஹோட்டல்கள் அனைத்திலும் அறைகள் பதிவு செய்து தங்களது உறவினர்களைத் தங்கவைத்திருந்தனர். இதனால் மற்ற திருமண வீட்டாரும், அமமுக நிர்வாகிகளும் தங்கும் விடுதிகளில் அறைகள் இல்லாமல் தவித்தனர். அமமுக தொண்டர்கள் மட்டுமல்ல, நிர்வாகிகளுக்கும் தினகரன் அழைப்பிதழ் தராததால் அவர்கள் அதிருப்தியாகிவிட்டனர். வெளி மாவட்டம் தவிர்த்ததோடு திருமணம் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்டம், நகரத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகளுக்கே அழைப்பிதழ் தினகரன் தரவில்லை, அழைக்கவுமில்லை எனக்கூறப்படுகிறது.

 

 

 

Next Story

அதிமுக யாருக்கு சொந்தம்? சசிகலாவும் தினகரனும் அண்ணாயிசமும்..! #3 

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

Who owns AIADMK? Sasikala, Dinakaran

 

‘எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா’ காலக்கட்டத்தில், அஇஅதிமுக எதிர்கொண்ட துரோக வரலாற்றை விரிவாகவே பார்த்து வருகிறோம்! இந்த வரிசையில் அடுத்து வருவது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2018-ல் அம்மா முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன். இவருக்கும் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் என்ற தகுதியோடு அதிமுகவுக்குள் நுழைந்த இவரால், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக முடிந்தது.

 

Who owns AIADMK? Sasikala, Dinakaran

 

2011-ல் சசிகலாவோடு சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்களையும் அதிமுகவிலிருந்து விலக்கி வைத்த ஜெயலலிதா, தான் உயிரோடு இருந்தவரையிலும், தினகரனை போயஸ் கார்டன் பக்கம் தலைகாட்டவே விடவில்லை. இந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கப்பட்ட தினகரனை, ஜெயலலிதா மறைந்ததும், தன்னுடைய சுயநலத்துக்காக, தண்டனை பெற்று சிறை செல்வதற்கு முன்பாக, 2017-ல் அவசரகதியில் கட்சியில் சேர்த்து, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆக்கினார் சசிகலா. இந்த நடவடிக்கையை மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டதால், ‘கழகமே கோவில்; அம்மாவே தெய்வம்’ என்று அக்கட்சியினர் உச்சரித்து வந்ததெல்லாம், பொய்யாகிப் போனது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், அதிமுக, திமுக வேட்பாளர்களை, டோக்கன் மூலம் வீழ்த்தி, தினகரன் எம்.எல்.ஏ. ஆனதெல்லாம், வரலாற்றில் பதிவான வீரதீர சாகசமே!

 

அக்கட்சியின் அம்சமே துரோகங்கள் தொடர்வதுதானே! சசிகலாவும்கூட திடீர் பொதுச் செயலாளராக முடிந்தது. ஆனாலும், நான்காண்டு சிறைத்தண்டனை தீர்ப்பால், 45 நாட்களிலேயே முதலமைச்சர் கனவு தவிடுபொடியானது. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கை, எடப்பாடி பழனிசாமி இழைத்த பெரும் துரோகமாகப் பேசப்படுகிறது. 

 

Who owns AIADMK? Sasikala, Dinakaran

 

இந்த நேரத்தில், ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ‘தர்மயுத்தம்’ வேறு நினைவுக்கு வருகிறது. 2016, டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறந்துவிட, மறுநாள் 6-ஆம் தேதி முதலமைச்சரானார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா முதலமைச்சராவதற்கு அவர் இடைஞ்சலாக இருக்க.. கட்டாயப்படுத்தி முதலமைச்சர் நாற்காலியில் இருந்து இறக்கப்பட்டார். பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். பிறகுதான், சுதாரிப்பாகி தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பி.எஸ். கூவத்தூர் விடுதியிலோ, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி, சசிகலா முன்னிலையில், அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். பின்னாளில் சமாதானமாகி, துணை முதல்வர் பொறுப்பு கிடைத்தாலும், தன்னிடமிருந்து முதலமைச்சர் பதவியைத் தட்டிப்பறித்ததை, இன்றுவரையிலும் ஜீரணிக்க முடியாதவராகவே இருக்கிறார் ஓ.பி.எஸ்.  

 

‘சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்பதே லட்சியம்’ என்று மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்ட சசிகலாவுக்கும், தினகரனுக்கும் ஏனிந்த கோபம்? சிறையிலிருந்து வெளிவந்த தனக்கு உரிய மரியாதையை ஆட்சியாளர்கள் தரவில்லை என்பது சசிகலாவின் ஆதங்கமென்றால், அதிமுகவை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்பது தினகரனின் திட்டமாக இருக்கிறது.

 

‘அதிமுகவினர் போற்றிப் பாட வேண்டிய மரியாதைக்குரிய தலைவரா சசிகலா?’ என்று கேட்டால், அந்த அடிமட்டத் தொண்டனுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வருகிறது. “அதிமுக என்ற கட்சி எம்.ஜி.ஆர். சிந்திய கண்ணீரில் அல்லவா தோன்றியது? ஆட்சிக்கு வருபவர்கள் தூய்மையானவர்களாகவும், தொண்டுள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்றுதானே இந்தக் கட்சியை ஆரம்பித்தார்? லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சிதானே அவரது லட்சியமாக இருந்தது? அதிமுக என்ற கட்சி மீதும் ஆட்சி மீதும் இத்தனை குறியாக இருக்கிறார்களே? கட்சியில் ‘முதல் மரியாதை’ கிடைத்தே ஆகவேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்களே? ஆதாயத்துக்காக அனைத்தையும் பண்ணிவிட்டு, ‘கட்சியையும் ஜெயலலிதாவையும் பாதுகாத்தோம்’ என்று தியாகப் பட்டம் சூட்டிக்கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  ‘எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்’ என்ற கட்சிக் கொள்கையை சசிகலாவும் தினகரனும் எந்த விதத்தில் கடைப்பிடித்தனர்?” என்று திருப்பிக் கேட்கிறார்.  

 


அதையும் பார்த்துவிடுவோம்! 
தொடரும்..

 

\