தமிழகத்தின் அரசியல் என்பது எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஒரு களம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக, முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் களம் என்பது தினமும் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகளில் எப்போதாவது வரும் முக்கியச் செய்திகளுக்கான அறிவிப்பு, தற்போதெல்லாம் தமிழர் வாழ்க்கையில் தினசரி நிகழ்வாகிப் போனது. அதுவும் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலோடு துவங்கி அதிமுகவின் உள்கட்சி பிளவோடு முடிந்த காரணத்தால் தலைப்புச் செய்திகளுக்கு எந்தப் பஞ்சமும் இல்லாமல் இந்த ஆண்டும் சிறப்பாகவே முடிந்திருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியாத சூழல் நிலவிவந்த நிலையில், அது அனைத்தும் இந்த ஆண்டு குறைந்ததால் ஜனவரியில் முழுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, புத்தாண்டை அனைவரும் சுதந்திரமாகவே அனுபவித்தனர். சராசரி மனிதருக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்து. அதேபோல், கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டிய கடமை ஆளும் கட்சிக்கு இருந்தது. இதனால் ஆண்டின் துவக்கத்திலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
எதிர்பார்க்காத நேரத்தில் தேர்தலா என்று மற்ற கட்சிகள் ஆச்சரியத்தில் மூழ்க, ஆண்ட அதிமுகவோ நாங்கள் தயார், வெற்றி எங்களுக்கே என்று எடப்பாடி, பன்னீர் அணியினர் கூட்டாக அறிவித்தனர். அதற்கேற்ப மாவட்ட கூட்டங்களைக் கூட்டி கட்சியினருக்கு அரசியல் பூஸ்ட் அளித்தனர். இதுவொருபுறம் அமைதியாகச் சென்றுகொண்டிருக்க திமுகவுக்கு வில்லனாகத் தலையில் வந்த விழுந்தது பொங்கல் பரிசு என்னும் செங்கல் தொகுப்பு. பொங்கலை முன்னிட்டு 21 பொருட்களைக் கொண்ட பரிசு தொகுப்பினை திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், அதில் பெரும்பாலான பொருட்கள் சரியான முறையில் இல்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. குறிப்பாக இதில் பலகோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று எடப்பாடி தரப்பு போராட, சற்று அதிர்ந்து போன திமுக, உடனடியாக அதிகாரிகள் தலைமையில் கூட்டத்தைக் கூட்டி அரசுக்குப் பொருட்களை வழங்கிய சில கம்பெனிகளை கருப்புப் பட்டியலில் சேர்த்தது.
வெல்லத்தை வைத்து சில வாரங்கள் அரசியல் களம் ஆளுங்கட்சிக்குக் கசப்பாகவும், எதிர்க்கட்சிக்கு இனிப்பாகவும் இருந்த நிலையில், ஏற்கனவே அறிவித்த உள்ளாட்சித் தேர்தல், பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் அரசியல் கட்சிகளைப் பார்த்து ‘உள்ளேன் ஐயா’ என்றது. முந்திரி, திராட்சை எனப் பொங்கல் பொருட்களை எல்லாம் மறந்து அரசியல் களத்தில் வேகமாகச் சுழன்றடித்தன அரசியல் கட்சிகள். பிப்ரவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தல் முடிவு என்பது எப்போதும் போல ஆளும் கட்சிக்குச் சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஆளும் கட்சியே எதிர்பார்க்காத வகையில் வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக அதிமுகவின் வாக்கு வங்கி சுமார் 25 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்தது.
இந்த உள்ளாட்சித் தேர்தல் பரபரப்புக்கள் ஓரளவு அடங்கி அரசியல் களம் அமைதியாக இருந்த நிலையில், எப்படி அமைதியாக இருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி நினைத்தாரோ என்னவோ மொழி தொடர்பாக அவர் பேசிய கருத்துக்கள் தமிழகத்தில் அரசியல் சூட்டைக் கிளப்பின. குறிப்பாக இருமொழிக் கொள்கைக்கு எதிராக அவர் பேசியதற்கு ஆளும் அரசு கடும் எதிர்வினையாற்றியது. ஆண்டு துவக்கத்திலேயே முட்டல் மோதலோடு துவங்கிய இந்த ராஜ்பவன் மோதல் டிசம்பர் வரை தொடர்கிறது. இதற்கிடையில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ராஜ்பவன் லாக்கரில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீட் மசோதா, கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்றாண்டாக குறைக்கும் மசோதா, ஆன்லைன் ரம்மி மசோதா என ஆளுநரின் கையெழுத்துக்காகக் காத்து கிடக்கும் மசோதாக்கள் ஏராளம்.
ஆளுநருக்கும் அரசுக்கும் அரசியல் சண்டை ஒருபுறம் என்றால் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியான அதிமுகவில் நடைபெற்ற அதிகார மோதல் என்பது அதிமுக தொடங்கப்பட்ட இந்த 50 ஆண்டுக்காலத்தில் கண்டிராத ஒரு சோகமான நிகழ்வு. இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலக் கட்சி வெற்றியை மட்டுமே அதிகம் சுவைத்துள்ளது என்று கூறவேண்டுமானால் அதிமுகவைக் கண்ணை மூடிக்கொண்டு கூறலாம். தமிழ்நாட்டில் கடைசியாக நடைபெற்ற கடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் 7 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, நாங்க வேற மாதிரி என்று காலரைத் தூக்கிவிட்ட கட்சியாக இருந்த அதிமுக, தற்போது யார் தலைமையில் எத்தனை அணிகளாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறியவே ஒரு ஆணையம் தேவைப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அண்ணன் தம்பிகள் என்று ஆண்டின் துவக்கத்தில் கூறிய எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ‘யார் நீ?’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டது அதிமுகவின் இன்றைய வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் யார் உண்மையான அதிமுக என்ற வழக்கில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நிச்சயம் தீர்ப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
அதிமுகவில் நடைபெறும் இந்தச் சண்டையில் லாவகமாகத் துண்டைப் போட்டு அரசியல் செய்ய ஆரம்பித்தது பாஜக. கடந்த 20 ஆண்டுக்காலமாக பாஜகவைப் புறம் தள்ளிய திராவிட இயக்கங்கள் அண்ணாமலையின் வாட்ச் கட்டிய கைகளைச் சமாளிக்க ஆரம்பத்தில் சற்று திணறித்தான் போனார்கள். தமிழக அரசியலில் எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் அரசின் மீது சொல்வதுண்டு. ஆனால், அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்பது அருகில் அமர்ந்திருக்கும் அவர்களது கட்சிக்காரர்களே, ‘அண்ணே, போதும்ண்ணே’ என்று சொல்லுமளவுக்கும் சிரிப்பை வரவைக்கும் அளவுக்கும் தர லோக்கலாக இருந்தது. 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் என்கிறார்களே, பில்லு இருக்கா என்று கேட்டால், “இதை வைத்தே 25 சீட்டை ஜெயிப்போம், டீக்கடையில் பேசட்டும் அதற்கு பிறகு பில்லை வெளியிடுகிறேன், நான் தேசியவாதி” என்று அண்ணாமலை கூறுவதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஏற்படுகின்ற தலைவலியைப் போக்க நாமே ஒரு டீக்கடைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசிக தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளில் கவனிக்கப்படும் அளவிற்கு மக்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கொண்டிருக்கும் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆகஸ்டு 17ம் தேதி தனது 60வது அகவையை எட்டினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 4 எம்.எல்.ஏக்களும், நாடாளுமன்ற மக்களவையில் 2 எம்.பி.க்களையும் கொண்டுள்ள விசிக தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளில் களத்தில் போராடிவருகிறது. தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாளை மாநிலம் முழுக்க வெகு விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.
அண்ணாமலை அரசியல் என்பது ஒன்வேயில் சென்று கொண்டிருந்தால், திமுகவின் அடுத்த நம்பிக்கை என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டது தான் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிரடி அரசியல் மாற்றம். உதயநிதி பொறுப்பேற்கிறார் என்று தெரிந்த மாத்திரத்திலேயே பாஜக, அதிமுக கட்சிகள் வாரிசு கோதாவில் இறங்கின. அரசியலுக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அமைச்சராக்கும் அளவுக்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜகவும், ஆண்ட அதிமுகவும் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். கட்சிக்கு வந்த மூன்று வருடத்தில் ஜெயலலிதா எந்தத் தகுதியின் அடிப்படையில் மாநிலங்களவைக்கு எம்.பி.யாகச் சென்றாரோ, கட்சிக்கு வந்த எட்டே மாதத்தில் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை எப்படி வந்தாரோ, கட்சிக்கு வந்த சில வருடங்களிலேயே மக்களைச் சந்திக்காமல் தேர்தலில் நிற்காமல் இந்தியாவின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் எந்தத் தகுதியின் அடிப்படையில் வந்தாரோ அந்தத் தகுதியின் அடிப்படையிலேயே உதயநிதி ஸ்டாலினும் அமைச்சராக்கப்பட்டுள்ளார் என்று ஒற்றை வரியில் கூறி எதிர்க்கட்சியினருக்கு எண்ட் கார்டு போட்டு ஆண்டை நிறைவு செய்துள்ளார்கள் திமுக மூத்த தலைவர்கள்.