கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்குக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி முதல்வரின் கருத்தை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் இருக்கிறார்கள்; ஆனால் முந்தைய அதிமுக ஆட்சி 10 வருடம் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியது என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் என்ன மக்கள் விரோத செயல்பாடு நடைபெற்றது என்று கூறியுள்ளார். அப்படி ஏதாவது இவர் ஆட்சியில் நடைபெற்றதைப் போல் நடந்துள்ளதா? இவரின் பத்தாண்டு ஆட்சியில் ஏதோ பாலாறும் தேனாறும் ஓடியதைப் போல் அவர் திமுக ஆட்சியைக் குறைசொல்ல வந்துவிட்டார். இவரின் ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற அராஜகங்கள் கொஞ்சமா? எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது. எத்தனை பேர் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள். இவர்களை வரலாறு கூட மன்னிக்காது. குறை கூறும் அளவுக்குத் தமிழக அரசு எந்த வித தவறும் செய்யவில்லை.
இவர் தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியில் தனக்குத் தானே அமர்ந்துகொண்டுள்ளார். புதிய வேலையில் சேரும்போது ஆறு மாதம் அப்ரண்டிஸ் ஆக பணியாற்றுவதைப் போல் இவர் தற்போது ஆறு மாதத்திற்கு அப்ரண்டிஸ் பணிக்கு வந்துள்ளார். ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அவர் வேலை இல்லாமல் போகப்போகிறார் என்பது மட்டும் நிஜம். இவர் என்னமோ தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ததுபோல் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். இவரது ஆட்சியில் தங்க வைர மழையைப் பொழிய வைத்ததுபோல் பேசுகிறார். தமிழகத்தை 10 ஆண்டுக் காலத்தில் சீரழித்தவர்கள் இவர்கள். இவர்கள் மற்றவர்களைப் பற்றிப் பேசக்கூடிய தார்மீக தகுதியைக் கூட இழந்துவிட்டார்கள்.
இவர்கள் ஆட்சியில் மந்திரிகள் அடித்த கொள்ளைகள் கொஞ்சமா நஞ்சமா, ஆவினில் மட்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1.5 கோடிக்கு சுவீட் சாப்பிட்டுள்ளார். உலகத்திலேயே இந்த அளவுக்கு ஒருத்தர் சுவீட் சாப்பிட்டது இவர் ஒருத்தராகத்தான் இருக்கும். செக் பண்ணி பார்த்தா இவருக்குத்தான் சுகர் லெவல் அதிகமாக இருக்கும். இவர் மட்டுமா கொள்ளை அடித்தார், ஒட்டுமொத்த அமைச்சரவையே கொள்ளை அடிப்பதையே குறியாக வைத்துச் செயல்பட்டனர். முன்னாள் அமைச்சர் குட்கா வழக்கில் அடித்த கொள்ளை உலகத்துக்கே தெரியும். குட்கா விற்கக்கூடாது என்று தமிழகத்தில் அதைத் தடை செய்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரது அமைச்சர்களே குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று தமிழகத்தில் அதைக் கடலாகப் பெருக்கெடுக்கவிட்டனர். இதை இல்லை என்று மறுப்பார்களா? இந்த சூழ்நிலையில் அவர்கள் திமுகவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறை சொல்கிறார்கள்.