Skip to main content

ரஜினியைப் பயன்படுத்திக்கொண்ட ரஞ்சித்! 

Published on 07/06/2018 | Edited on 08/06/2018

படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி. சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி, சிக்ஸர் அடிக்கவில்லை, 'போல்டு' ஆகிறார். அதை ஒத்துக்கொள்ள மறுத்து 'அழுகுணி' செய்கிறார்.

"க்யா ரே... செட்டிங்கா?" என ட்ரைலரில் கலக்கிய வசனம் வரும் காட்சி. பேசிவிட்டு வில்லன்களை தெறிக்க விடுவார் என்று எதிர்பார்த்தால்...  அந்தக் காட்சியில் நடப்பது வேறு. 

இப்படி, ஆரம்பத்திலேயே இது ரஜினி படமில்லை என நம்மைத் தயார் செய்துவிடுகிறார் இயக்குனர் ரஞ்சித். முழுவதுமாக 'மாஸ்' காட்சிகளே இல்லாத படமுமில்லை. மாஸ் காட்சிகள் உண்டு, நாம் எதிர்பார்ப்பது போலிருக்காது, எதிர்பார்க்கும்போது இருக்காது. ஆம், ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகியிருக்கும் 'காலா' பல ஆச்சரியங்களையும் சில ஏமாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறது.

 

rajini eswari



ஒரு திரைப்படமாக மட்டும் இதைப்  பார்க்கவிடாமல் அதுக்கும் மேல பார்க்கவைப்பது ரஜினியின் இன்றைய அரசியல் நிலைப்பாடும் ரஞ்சித்தின் செயல்பாடுகளும். அதைக் கடைசியில் பார்ப்போம்.

மும்பை தாராவி பகுதியில் தன் பெரிய குடும்பத்துடன் தனது அப்பா காலத்திலிருந்து வாழ்ந்து வருகிறார் கரிகாலன் என்ற ரஜினிகாந்த். அதே மும்பையில் பெரும் தேசிய கட்சித் தலைவராக இருக்கும் நானா படேகர், தாராவி பகுதியில் இருக்கும் குடிசை வாழ் மக்களைத் துரத்தி விட்டு பின் அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் திட்டத்தை அறிவித்து அதற்கான வேலைகளை ஆரம்பிக்கிறார். 'நிலம் எங்கள் உரிமை' என்று போராடும் ரஜினிகாந்த்துக்கும் 'ஆளப் பிறந்தவன் நான்' என அபகரிக்க நினைக்கும் நானா படேக்கருக்கும் நிகழும் யுத்தம்தான் 'காலா'.

 

kaala kani



ஸ்டைல், ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடிருக்கிறார் 'சூப்பர்ஸ்டார்' ரஜினி. வில்லனிடம் வில்லத்தனம் செய்துவிட்டு, பின்னர் மனைவி ஈஸ்வரிராவிடம் வந்து பம்புவதிலும் சரி, முன்னாள் காதலியான ஹூமா குரேசியிடம் தடுமாறுவதிலும் சரி, மனைவி மகனுக்கு விபத்து ஏற்படும் காட்சி என ரஜினி நடிக்க பல காட்சிகள் கிடைத்திருக்கின்றன, அவற்றில் மிக சிறப்பாக ஜொலித்திருக்கிறார். ஆனால், அடிக்கும் அடிகளில் முன்பிருந்த வலிமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

 

 


ரஜினிக்கு அடுத்து கவனிக்க வைக்கும் பல பாத்திரங்கள் இருக்கின்றன. வில்லனாக வரும் நானா படேகர் வரும் காட்சியிலெல்லாம் அவரை மட்டுமே பார்க்க தோன்றுகிறது. வழக்கமான வில்லன் பாத்திரமென்றாலும் அதில் அவரது இருப்பு புதிய அனுபவத்தைத் தருகிறது. ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் அறிமுகம் ஆகும் காட்சியில் தொடங்கி, தன் இறுதிக் காட்சி வரை சரவெடி. அதுவும் ரஜினி 'ஐ லவ் யூ' சொல்லும் இடத்தில் இவர் கொடுக்கும் ரியாக்சன் அட்டகாசம். ஹூமா குரேசி அழகான பழைய நினைவு போலிருக்கிறார். 'குடி' நண்பனாக வரும் சமுத்திரக்கனி ஆங்காங்கே கிச்சுக்கிச்சு மூட்டி காட்சிகளை சற்று லேசாக்குகிறார். 'வத்திக்குச்சி' திலீபன், அஞ்சலி பாட்டீல், மணிகண்டன் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.

 

 

 

nana



கதை என்று பார்த்தால், நாம் பல படங்களில் பார்த்த கதைதான். அதைத்தாண்டி படம் நடக்கும் களத்தை நமக்கு முழுமையாக அறிமுகம் செய்வது, வயதான பின்னும் ஈரமாக மகிழ்ச்சியாக இருக்கும் காதல், ஒடுக்கப்படுவோருக்காகப் பேசப்படும் அரசியல் என பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. தன் படங்களில் இடம் பெறும் வாழ்க்கையை முழுமையாக, உண்மையாக காட்டுவது ரஞ்சித்தின் திறன். 'காலா'விலும் அது தொடர்கிறது. இத்தனை பெரிய நாயகன் இருக்கும்போது அதற்கேற்ற சவால்கள் இருக்கும். அதுபற்றியெல்லாம் மிகக்குறைவாகவே கவலைப்பட்டு தன் வழியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் ரஞ்சித். அதனால், ரஜினி ரசிகர்களுக்கு 'கூஸ் பம்ப்ஸ்' மொமெண்ட்டுகள் வெகு சிலதான். 'காலா' என்ற நாயக பிம்பத்தை, ஃபிளாஷ்பேக்கில் வரும் அவரது தந்தை வேங்கய்யன் பாத்திரம் உள்பட பல பாத்திரங்கள் சற்று நீர்க்க வைக்கின்றன.  ரஜினி, என்பதை மறந்துவிட்டு ஒரு நாயகனுக்கும் வில்லனுக்குமான யுத்தமாகப் பார்த்தாலும் விறுவிறுப்பு குறைவாக இருப்பது உண்மை. முதல் பாதியில் தேவைக்கு சற்று அதிகமான காதல், இரண்டாம் பாதியில் செயலை விட அதிகமான சொல் என இந்த இரண்டும் சற்று தொய்வை உண்டு செய்கின்றன.

 

 


நிலம் சார்ந்த அரசியல் குறித்த விளக்கம், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அடிக்கடி பேசும் காலா, உடையை அவிழ்த்து அவமானப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து அடிக்கும் போராளிப் பெண், காலில் விழ வரும் சிறுமியைத் தடுத்து கை கொடுப்பது என ரஞ்சித் பேசும் விஷயங்கள் மிக தீர்க்கமான பார்வை கொண்டவை. என்றாலும், வண்ணங்கள், வசனங்கள், குறியீடுகள், கறுப்பு - வெள்ளை நிற ஒப்பீடுகள் என படத்தைப் பின்னுக்கு இழுத்து ரஞ்சித் பேச விரும்பும் அரசியலே படமெங்கும் முன் நிற்கிறது. அதில் தற்கால நிகழ்வுகள் பல இடம்பெற்றிருப்பது ஆறுதல் தரும் நல்ல தாக்கம்.
 

 

 

huma



படத்திற்கு பெரிய பலம் தா. ராமலிங்கத்தின் செட். கனகச்சிதமாக அச்சு அசல் தாராவியை கண் முன் நிறுத்தியுள்ளார். இவருக்கு விருதுகள் நிச்சயம். முரளியின் ஒளிப்பதிவில் சந்துகள், சின்னஞ்சிறு வீடுகள், சால் என தாராவிக்குள் நம்மை வாழவைத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு தொழில்நுட்ப ரீதியாக உயர்தரம், நீளத்தில் இன்னும் சற்று கவனம் இருந்திருக்கலாம். சந்தோஷ் நாராயணின் இசை படத்துடன் கலந்து இருக்கிறது. கண்ணம்மா பாடல், நானா படேக்கருக்கான பின்னணி இசை ஆகியவை உதாரணங்கள். படத்தின் முக்கிய பலம் சந்தோஷின் இசை.

 

 


'கபாலி' ரஜினி படமாகவே இல்லையென்று பேச்சு வந்தது. 'காலா' படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே 'இது ரஜினி அரசியலுக்குப் பயன்படுமா அல்லது ரஞ்சித் அரசியலுக்குப் பயன்படுமா' போன்ற விவாதங்கள் தொடர்ந்து இருந்தன. படத்தைப் பார்க்கும்பொழுது ரஞ்சித் பேச விரும்பியதற்கு ரஜினி பயன்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. தவறான விஷயத்தைப் பேசிவிடவில்லை.   

 





 

 

சார்ந்த செய்திகள்