திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜா, தற்போது இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் விஜய்யின் ‘தி கோட்’ படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் படங்களையும் தயாரித்து வருகிறார். ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட பணிகளை கவனித்து வரும் அவர், இசையமைப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றுகிறார். இதற்கிடையே லாங் ட்ரைவ் என்ற தலைப்பில் இசைக் கச்சேரியும் நடத்தி வருகிறார்.
தொடர்ந்து படங்களில் அவர் பணியாற்றி வந்தாலும் சமீபகாலமாக அவரது இசை ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. கடந்த வருடம் வெளியான லவ் டுடே படத்தின் ப்ரொமோவில் கூட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “பழைய யுவன் வேணும் சார்” எனக் கேட்டிருப்பார். இருப்பினும் அவர் இசையில் இந்தாண்டு அடுத்தடுத்து வெளியான ஸ்டார், கருடன் போன்ற படங்களின் பாடல்கள் பெரிதளவு வரவேற்பைப் பெறவில்லை.
இதனிடையே ஏழு கடல் ஏழு மலை படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி கோட் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் “பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும்” என யுவன் ஷங்கர் ராஜா பேசியிருக்கிறார். ஒரு தனியார் பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யுவன், “முதலில் நான் இசையமைத்த சில படங்கள் பிளாப் ஆனது. அதன் பிறகு என்னை ஃபெயிலியர் கம்போசர் என முத்திரைகுத்தி விட்டார்கள். பின்பு என்னுடைய வீட்டில் கதவை அடைத்துக் கொண்டு அழுது, அப்படி என்ன தவறாக செய்துவிட்டோம் என்று நினைப்பேன்.
சில நாட்கள் சென்ற பிறகு இசையில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதனால்தான் இன்று உங்கள் முன்பு வந்து நிற்கிறேன். இதிலிருந்து நான் சொல்ல வருவது... பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும், நம்ம நடந்து போய் கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் கேட்கக்கூடாது. நெகட்டிவ்வான விஷயங்கள் நம்மை கீழே தள்ளிவிடும். அதனால் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும்” என்று தன் அனுபவத்தினால் அறிவுரை கூறினார்.