திஷா பதானி பாலிவுட் படங்களைத் தொடர்ந்து தற்போது கங்குவா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவரின் தந்தையும் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளருமான ஜகதீஷ் சிங் பதானி தன்னை 5 பேர் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளதாக போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
பரேலியின் சிவில் லைன்ஸ் பகுதியில் வசித்து வரும் ஜகதீஷ் சிங் பதானி, சிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கர்க், ஜெயபிரகாஷ் ஆகியோருடன் பழகியிருக்கிறார். அவர்கள் ஜகதீஷ் சிங் பதானியிடம் பழகிய சமயத்தில் அரசியல் பின்புலம் தங்களுக்கு இருப்பதாகவும் அதைப் பயன்படுத்தி உத்திரப்பிரதேச அரசாங்க ஆணையத்தில் உயர் பதவி வாங்கி தருவதாகவும் பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் கூறியதை நம்பிய ஜகதீஷ் சிங் பதானி, ரூ. 5 லட்சம் ரொக்கமாகவும் ரூ.20 லட்சத்தை மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கும் பணப் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு மூன்று மாதங்களாக வேலை தொடர்பாக எந்தவித முன்னேற்பாடும் எடுக்காமல் இருந்ததால் மீண்டும் தாங்கள் பெற்ற பணத்தைத் திருப்பி தருவதாக சிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கர்க், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஜகதீஷ் சிங் பதானி கூறியிருக்கின்றனர்.
அதனால் ஜகதீஷ் சிங் பதானி, அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்டக போது, மிரட்டல் தொனியில் அந்த மூன்று பேர்கள் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகப்பட்ட ஜகதீஷ் சிங் பதானி, பணத்தை திருப்பி தராமல் தன்னை ஏமாற்றுவதாக உத்திர பிரசேதம் பரேலி கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கர்க், ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.