Skip to main content

360 டிகிரி வடிவிலான மேடை புது அனுபவத்தைத் தரும்” - யுவன் ஷங்கர் ராஜா

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
yuvan shankar raja about his concert

இரண்டு வருடங்களுக்கு மேலாக கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா தற்போது விஜய்யின், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது 'U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூமர் ஃபேஷன் எனும் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் விளம்பரதாரராக பங்களிப்பு செய்கிறது. 

இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது.‌ கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும்- ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது.  இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே தருணத்தில் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். என்னுடைய விருப்பத்தை நாய்ஸ் & கிரைன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தேன். அந்த தருணத்தில் 360 டிகிரி வடிவிலான மேடையை அமைப்பது குறித்து விவாதித்தோம். இந்த புது அனுபவத்தை  ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.  இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது ரசிகர்களையும் , என்னையும் உற்சாகப்படுத்தும்.  ஜூலை 27ஆம் தேதியன்று ஒய் எம் சி ஏ மைதானத்தில் சந்திப்போம்” என்றார்.

சார்ந்த செய்திகள்