இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் (10.09.2023) சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் இது போன்ற ஒரு மோசமான ஒரு இசை நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தங்களது டிக்கெட் நகலை பகிரவும் எனவும் குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் யுவனம் ஷங்கர், "இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையில் மனதை கனக்கச் செய்கிறது. திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக பங்கெடுக்க நான் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் இந்த சம்பவம் எச்சரிக்கை விடுக்கிறது.ஒரு சக இசையமைப்பாளராக இந்த சூழலில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை கருத்தில் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான் துணை நிற்கிறேன்" என குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார்.
கார்த்தி, "நாங்கள் ரஹ்மான் சாரை 3 தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்திருக்கிறோம், நேசிக்கிறோம்... கச்சேரியின் போது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், அவர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று தெரியும். குழப்பங்களுக்கு மத்தியில் எனது குடும்பத்தினரும் கச்சேரியில் இருந்தனர். ரஹ்மான் சார் எப்போதும் தனது அன்பை அனைவருக்கும் கொடுப்பதால் வெறுப்பை விட அன்பை தேர்வு செய்யுமாறு அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குஷ்பு, "நாம் அனைவரும் இந்த கடினமான சமயத்தில் ரகுமானுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்"ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்பவர். டைமண்ட் பாஸ் இருந்தும் உள்ளே அனுமதிக்கப்படாதவர்களில் எனது மகள் மற்றும் அவரது நண்பர்களும் இருந்தனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது தான். இருப்பினும் ஏ.ஆர் ரஹ்மான், மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் பொறுப்பேற்க முடியாது. இந்த குளறுபடிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம்" என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சீனுராமசாமி தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.