கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம் கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.