94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. அவர் பெரும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விழாவில், வில் ஸ்மித்தின் மனைவியான ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்ற தலையை ’ஜி.ஐ. ஜேன்’ படத்தில் வரும் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிறிஸ் ராக் கிண்டலடித்தார். இதைக் கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையிலிருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்து மேடையில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனைத் தொடர்ந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்த வில் ஸ்மித் ஆஸ்கர் அகடாமியிடமும் மன்னிப்புக் கோரினார். இருப்பினும் அகாடமியின் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஆஸ்கர் குழு வரும் 18 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் வில் ஸ்மித் அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Science) அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து யாருக்கு விருது வழங்குவது என்பதை முடிவு செய்யும் குழுவாகும். இதிலிருந்து வில் ஸ்மித் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.