பிரபல ஹாலிவுட் நிறுவனமான 'வார்னர் மீடியா' நிறுவனம், உலகம் முழுவதும் தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிறுவனத்திற்குச் சொந்தமான கார்ட்டூன் நெட்ஒர்க், போகோ, எச்.பி.ஓ, டபிள்யு.பி மூவி ஆகிய சேனல்கள் இந்தியர்களிடையே மிகவும் பிரபலமானவை. கரோனா ஏற்படுத்திய நெருக்கடி, தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வார்னர் மீடியா நிறுவனம் தனது சேவையில் மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 15-ஆம் தேதி முதல், இந்தியாவில் எச்.பி.ஓ, டபிள்யு.பி மூவி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என வார்னர் மீடியா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வார்னர் மீடியா நிறுவனம் விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதால், இன்று முதல் இவ்விரு சேனல்களின் ஒளிபரப்பானது நிறுத்தப்படுகிறது. அதே வேளையில், கார்ட்டூன் நெட்ஒர்க், போகோ ஆகிய சேனல்களின் ஒளிபரப்பு வழக்கம் போலத் தொடரவுள்ளது.
எச்.பி.ஓ சேனலானது இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும், டபிள்யு.பி மூவி சேனலானது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளில் இன்று முதல் நிறுத்தப்படுகிறது.