தமிழ் ஸ்டூடியோ... சென்னையில் மிக முக்கியமான பல முன்னெடுப்புகளை செய்யும் மிக முக்கியமான திரைப்பட இயக்கம். தமிழ் ஸ்டூடியோ ஒருங்கிணைக்கும் சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 நிகழ்வின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடக்கிறது.
பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்) மூன்று நாட்களும் சென்னை பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சாமிக்கண்ணு டென்ட் கொட்டாய், சினிமா சந்தை) மற்றும் MM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடல்கள் நடக்கின்றன.
நிர்ணயிக்கப்பட்டுள்ள நுழைவுக்கட்டணம் ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) என்றாலும் உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150 மட்டும் என்றும் பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் சலுகைகளும் உண்டு. இந்நிகழ்வுக்கு முன்பதிவு செய்ய பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 9840644916, 044 48655405. இந்தத் திரைப்பட விழா குறித்து, ஒருங்கிணைப்பாளரான தமிழ் ஸ்டூடியோ அருணிடம் இது குறித்து கேட்டோம்...
"கடந்த 10 வருடங்களாக தமிழ் ஸ்டூடியோ தமிழ் நாடு முழுவதும் நல்ல படங்களை ஊக்குவிக்கும் ஒரு இயக்கமாக இயங்கி வருகிறது. இந்த இயக்கத்துடைய மிக முக்கியமான முன்னெடுப்பு 'சென்னை சுயாதீன திரைப்பட விழா'. சினிமா கார்ப்பரேட் முதலைகளிடம் இருக்கும் வரை அது பொதுமக்களுக்கான படமாக மாறாது. அவர்கள் வணிக ரீதியாக அணுகுவதால் முழுக்க முழுக்க தவறான வழியைதான் பின் தொடர்கிறார்கள். ஆனால், அது எப்போது மக்கள் கலையாக மாறுகிறதோ அப்போது இருந்தே சமூகத்தை செழுமையாக மாற்றுவதற்கான செயலில் இறங்குகிறது.
சினிமா மட்டுமின்றி கலைபடைப்புகள் ஒருவரை நம்பி உருவாக்கப்படும்போது நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால், அது சுயாதினமாக இருக்கும்போது சமூகத்திற்கான ஒன்றாக மாறுபடுகிறது. சினிமாவை அப்படிதான் தமிழ் ஸ்டூடியோ அணுகுகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் தியேட்டர் அமைப்புகளோ, தயாரிப்பு நிறுவனங்களின் விதிமுறைகளை உடைத்து. சினிமா எடுக்க என்னிடமே ஒரு கதை இருக்கிறது, அதை நானே எடுப்பேன் என்கிற துணிச்சலை ஒருவருக்கு ஏற்படுத்ததான் சென்னையில் இந்த ஸ்டூடியோவை துவங்கினோம். கடந்த வருடம் இந்த நிகழ்ச்சி ஒரு நாள் மட்டுமே நடந்தது. இந்த வருடத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்தியாவில் முழுவதிலும் இருந்து பத்து மாநிலங்களிலுள்ள திரைடப்பட இயக்குனர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி நாளை மாலை நான்கு மணிக்கு பிரசாத் லேபில் துவங்குகிறது. தேவா சிஷ் என்கிற மிக முக்கியமான இயக்குனர், போன்ஸ்லே என்னும் படத்தை இயக்கியவர். மேலும் இந்த படத்தில் மனோஜ் வாஜ்பாய் என்னும் பெரிய நடிகர் நடித்திருக்கிறார். இதுதான் முதல் படமாக திரையிடுகிறோம். நூட் என்ற படம் கடந்த வருடம் சென்சார் சான்றிதழ் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு, பின்னர் போராடி அப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கினார்கள். அந்த படத்தை இந்த நிகழ்ச்சி நிறைவு பெறும் படமாக போடுகிறோம். தலித் பிரச்சனைகளை மையப்படுத்திய அம்ஷன் குமாரின் படமான ‘மனுசங்கடா’ படத்தையும் திரையிடுகிறோம். 17 குறும்படங்கள் திரையிடுகிறோம். தமிழ் மொழி மட்டுமல்லாமல் வங்காளம், மராத்தி, ஆங்கிலம் என்று 8 மொழிகளில் படங்களை திரையிடுகிறோம். 36 படங்கள் இல்லாமல் மூன்று மாஸ்டர் கிளாஸ் இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்படுகிறது. தபஸ் நாயக் என்ற ஒலி அமைப்பாளரை வைத்து ஒலி திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்று கிளாஸ் எடுக்கிறோம். சினிமாவை எப்படி எழுத வேண்டும் என்கிற முக்கியமான ஒரு மேடை பேச்சு இருக்கிறது. சென்சாரில் எவ்வாறு அனுகுவது, எல்ஜிபிடி படங்கள் பற்றி, மொத்தம் நான்கு கலந்துரையாடல்கள் இருக்கின்றன. இவை மட்டுமல்லாமல் டெண்ட் கொட்டாய் ஒன்றை உருவாக்கி அதில் மிர்னால் சென் படங்களை திரையிட இருக்கிறோம். சினிமா மட்டுமின்றி முக்கியமான நடகங்களும் நடத்துகிறோம். இவை அனைத்திற்கும் நுழைவு டிக்கெட் ரூ.250, சினிமா துணை இயக்குனர்களுக்கும், சினிமாவில் இருப்பவர்களுக்கும் ரூ.150 ஆகும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்பவர்களுக்கு ரூ.100. என்னிடம் பணமே இல்லை என்பவர்களுக்கு இலவசமாக அனுமதிக்கிறோம். ஆனால், இது இந்தியாவிலேயே மிக முக்கியமான மக்களிடம் இருந்து நிதி திரட்டி நடத்தப்படும் திரைப்பட விழா என்பதால் நுழைவு சீட்டிற்கு கட்டாயமாக பணம் வசூல் செய்யவில்லை. இன்னுமொரு விஷயம் இந்தியாவிலேயே மக்களிடம் இருந்து நிதி வாங்கி மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் திரைப்பட விழா இதுதான். அதனால் இது இந்தியா முழுவதும் ஒரு அலையாக பரவினால், நல்ல கலையும், நல்ல சமுகமும் வளரும்.
இந்த வருடத்தின் மேலும் ஒரு முன்னெடுப்பு என்றால் சினிமா சந்தை என்று ஒரு விஷயத்தை செய்கிறோம். முக்கியமானவர்களை பற்றி எடுக்க இருக்கும் ஆவணப்படங்களை பற்றியோ, சமூக கருத்துகளை பிரச்சாரம் செய்யாமல், கலையாய் படம் எடுக்க வைத்திருக்கும் குறும்படத்திற்கான கதைகளை தயாரிக்க இருப்பதாக தமிழ் ஸ்டூடியோ தெரிவித்திருந்தது. இந்த வருடம் கதையை சொல்பவர்களில், தேர்வு செய்யப்பட கதையை படமாக்கி அடுத்த வருடம் சுயாதீன விழாவில் ஒளிபரப்ப இருக்கிறோம். அது போட்டியில் கலந்துகொள்ளாது, சாதாரணமாக திரையிடப்படும். ஸ்கிரிப்ட் டாக்டர் என்றொரு பகுதி இருக்கும், அங்கு உங்களுடைய கதைகக்கான ஸ்கிரிப்ட் டிஸ்கஸனுக்கு உதவி செய்வார்கள். மேலும் ஒரு பகுதியில் நடிக்கலாம் வாங்க என்று இருக்கும் அங்கு நடிப்பு குறித்து சொல்லிதரப்படும். இந்த விழாவின் மேலும் ஒரு பெருமை என்றால் இந்தியாவிலேயே நான்கு திரைப்படங்களை சிறப்பு திரையிடல் செய்கிறோம். குர்வீந்தர் சிங் என்ற சுயாதீன இயக்குனர், அவர் உலகத்தில் நடக்க கூடிய எந்த விழாவுக்கு நேரடியாக செல்ல மாட்டார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதுவே மிகப்பெரிய வெற்றி. இது மக்களிடம் இருந்து பெற்ற நிதியில் நடுத்தவதால் இது வணிகமாக வாய்ப்பில்லை. அதனால் இதில் கலந்துகொள்பவர்கள் அனைவருமே ஒரு ஆக்டிவிஸ்ட் போன்றே இருப்பார்கள். இதில் போடப்பட பட்ங்கள் குறித்து இறுதியில் விவாதம் இருக்கின்றன. இது முழுக்க முழுக்க சுதீன இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களே உலக கிளாசிக் திரைப்பட வரிசையில் இருக்கிறது. அதேபோல இந்திய கிளாசிக் என்று பார்த்தாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வங்காள படங்களோ, கேரல படங்களோதான். நல்ல கதையும், நல்ல டீம் இருந்தாலே போதும் பெரிய பட்ஜெட் ஒன்றும் தேவைப்படாது. ஒரு சுயாதீன இயக்குனர் கதையை படமாக எடுத்து எப்படியாவது மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதாகதான் இருக்கும். இதில் அனைத்துவிதமான படங்களும் பங்கேற்கலாம். நான் முன்பே சொன்னதுபோல கலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும், கலை வளமை ஏற்படும் என்று நம்புகிறோம்".