நடிகர் விஷ்ணு விஷால் குடிபோதையில் ரகளை செய்ததாக அவர் வசிக்கும் அபார்ட்மென்ட் ஓனர் போலீசில் புகார் அளித்தார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றும் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூகவலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்...
"நவம்பர் மாதம் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்தேன். தினமும் நான் படப்பிடிப்பில் 300 பேரை சந்திக்க வேண்டியிருந்தது. என்னுடைய பெற்றோரின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வெளியே தங்கிக்கொள்ள முடிவு செய்தேன். ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை நான் தயாரிப்பதால் நான் பட வேலையாக பலரை சந்திக்க வேண்டியிருக்கிறது. மேலும் ஜிம் கருவிகள் உதவியுடன் வீட்டில் உடற்பயிற்சி செய்து வருகிறேன். மொட்டை மாடியில் நடைபயிற்சியும் மேற்கொள்கிறேன்.
நான் இங்கு குடிவந்தது முதல் வீட்டு ஓனரால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறேன். அவர்கள் என்னிடமும், என் ஊழியர்களிடமும், தகராறு செய்தனர். அன்று ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் ஒளிப்பதிவாளரின் பிறந்தநாள் என்பதால் என் வீட்டில் ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். நான் உடற்பயிற்சி செய்வதால் மது எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மற்ற பார்ட்டிகளில் நடப்பதைப் போலவே என்னுடைய விருந்தினர்களுக்கு மது பரிமாறப்பட்டது. அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு உணரவில்லை. எங்களுடைய ப்ரைவசி தலையிடப்பட்டது. நான் போலீசாரிடம் மிகவும் அமைதியான முறையில் பேசினேன். வீட்டு ஓனரிடம் பதில் இல்லாததால் தகாத வார்த்தையைப் பயன்படுத்தினார். மனிதன் என்ற முறையில் நானும் அதற்கும் பதிலளிக்கும் வகையில் நானும் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.
என் மீது தவறு இல்லாததால் போலீசார் அங்கிருந்து சென்றனர். மீடியாவில் இருப்பதாலும், போலீஸ்காரரின் மகன் என்பதாலும் என்னை குற்றம்சாட்டுவதும் மக்கள் அதை நம்புவதும் எளிது. படப்பிடிப்புக்காக தினமும் வீட்டுக்கு தாமதாக வருவதையும், அதிகாலையில் கிளம்புவதையும் நாங்கள் சத்தமிடுவதாக கூறுவது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது. என்னுடைய சொந்த வீட்டுக்குள் நான் உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்பதற்காக நான் ஒதுக்கப்பட்டேன். நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை என்பதால் நான் பின்வாங்கவில்லை. ஆனால் நேற்று காட்டப்பட்ட விஷயம் முழுக்க முழுக்க என்னுடைய இமேஜை கெடுப்பதற்காகவே காட்டப்பட்டது.
வீட்டு ஓனர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய பின்புதான் நான் கோபப்பட்டேன் என்பதை அந்த வீடியோவிலேயே நீங்கள் பார்க்க முடியும். எந்த ஒரு மனிதனும் கெட்ட வார்த்தையை பொறுத்துக்கொள்ள மாட்டான். ஒரு கதையின் இரண்டு பக்கத்தையும் ஆராயாமல் மக்களும் மீடியாவும் மதிப்பீடு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். பொதுவாக நீண்ட விளக்கங்களைக் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. ஆனால் என்னை குடிகாரன் என்று கூறுவதும், கூத்தாடி என்று அழைப்பதும் திரைத்துறைக்கும், என் தொழிலுக்கும் அவமரியாதை. நான் மவுனமாக இருக்கப் போவதில்லை.
அபார்ட்மெண்ட் ஒனரின் நடத்தைகள் குறித்த ஆதாரத்தையும், தகவல்களையும் என்னால் பகிர முடியும். ஆனால் அவருக்கு என் அப்பாவின் வயது, எனவே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தவொரு அவப்பெயரையம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. நேற்று அவரது மகனிடம் பேசி சில விஷயங்களை முடிவு செய்தோம். இந்த இடத்திலிருந்து செல்ல வேண்டும் என்று எப்போதோ நான் முடிவெடுத்து விட்டேன். என் படத்தின் வேலைகள் முடிவதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன். இது என்னுடைய பலவீனம் அல்ல. தேவையற்ற சட்ட போராட்டத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை. என் ரசிகர்களுக்காகவும், நலம் விரும்பிகளுக்காகவும் நான் செய்யவேண்டியவை ஏராளம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.