இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெரிய நடிகர் படங்களுக்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 9 மணி சிறப்பு காட்சியுடன் வெளியான கங்குவா கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இது தொடர்பாக ஜோதிகா, “கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் “தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என யூடியூப்பர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது” என தயரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் படக்குழுவினர் மீது தனிப்பட்ட தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. மேலும் எந்த யூட்யூப் சேனலும் பார்வையாளர்கள் ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது எனக் கூறியது.
இதையடுத்து விமர்சன விவகாரம் தமிழ் சினிமாவில் பேரு பொருளாக மாற, அது குறித்து திரைப்பிரப்லாங்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசமி, காக்கா பட இசை வெளியீட்டில் பேசுகையில், “விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விமர்சனத்தை யாரும் தடுக்க முடியாது. அதை கட்டுப்படுத்த நினைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்” எனப் பேசியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் விமர்சனம் குறித்து சீனு ராமசாமி பேசியுள்ளார்.
சைலண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “நான் சின்ன வயதாக இருக்கும் போது விமர்சனத்தை கேட்டுவிட்டு எப்போதும் தியேட்டருக்கு போகமாட்டேன். சினிமா இதழ்கள் அத்தனையும் நூலகத்துக்கு போய் படித்துவிடுவேன். அதில் சினிமா விமர்சனங்கள் வரும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு தான் அதையெல்லாம் படிப்பேன். நம்ம நினைத்தது சரியா, நம்ம நினைத்த குறைகள் இதிலும் இருக்கிறதா என பார்ப்பேன். இப்படிதான் என்னுடைய ரூம் நண்பர் ஒருவர் முத்து படத்தை நல்லாயில்லை என கூறிவிட்டார். ஆனால் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. ஏனென்றால் தம்ம மதத்தில் இருக்கக் கூடிய புத்தருடைய கருத்துக்கள் அனைத்தும் அந்த படத்தில் இருக்கும். அதன் பிறகு போய் படம் பார்த்தேன். அப்போது முடிவு செய்தேன், இனிமேல் ரூம் நண்பர் சொல்லி சினிமாவுக்கு போகாமல் இருக்கக்கூடாது என்று. ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி படம் பார்த்துவிட்டு விமர்சனங்களை படிக்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை படிப்பேன். நாம் பார்க்காத கோணத்தில் இவர்கள் பாத்திருக்கிறார்கள் என ஆச்சரியப்படுவேன்.
பெரிய படங்கள் எல்லாமே பெரும்பாலும் வியாபாரத்தில் கரையேறி வந்துவிடும். ஆனால் சிறு படங்கள் அப்படி இல்லை. அதை கை பிடித்து அடையாளம் காட்டுவது பத்திரிக்கையாளர்களும் விமர்சகர்களும்தான். அதனால் சிறு படங்களுக்கு தேவை ஆரோக்கியமான விமர்சனமும் வழிகாட்டலும்தான். சமீபத்தில் பராரி என்று ஒரு படம் வெளியாகியிருக்கிறது. ரொம்ப முக்கியமான கதைகளத்தை வைத்து நல்லா எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தியேட்டர் வாசலில் பப்ளிக் ரிவியூ கேட்காததால் அந்தப் படம் வந்ததே நிறைய பேருக்குத் தெரியவில்லை. அதனால் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டர் வாசலில் ரிவியூ கேட்பதற்கு அனுமதியுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் சிறு படங்கள் மக்களின் கவனத்திற்கு வராமலே போய்விடும்” என்றார்.