
விஷால் தற்போது துப்பறிவாளன் 2 பட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக சுந்தர் சி, கௌதம் மேனன், அஜய் ஞானமுத்து ஆகியோர் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் மும்மொழி கொள்கை தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது, “எல்லா பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. நிறுத்த வேண்டும் என்றால் அனைத்து பள்ளிகளிலுமே நிறுத்த வேண்டும். என்ன படிக்க வேண்டும் என்பதை பெற்றோரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரும் மொழியின் முக்கியத்துவம் பலனறிந்து முடிவெடுக்க வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையில் எதையும் திணிக்க முடியாது. அப்படித் திணித்தால் அது வெற்றி பெறாது. அது மத்திய மாநில அரசுகள் யார் செய்தாலும் சரி” என்றார்.
பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் நடவடிக்கை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அப்போது இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்” என்றார். பின்பு நடிகர்கள் அரசியலுக்கு வருதை விமர்சனம் செய்வதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது விமர்சனம் கிடையாது. சமூக சேவை செய்வதற்கு யார் மனதில் ஆசை, தைரியம் இருக்கிறதோ, அவர்கள் அரசியலுக்கு வரலாம்” என்றார்.