இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மறைந்த தினம் இன்று (27.7.2023). இதனை முன்னிட்டு அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் மரக்கன்றுகளை நட்டார். பின்பு மாணவ மாணவிகளிடம் பேசிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது பேசுகையில், "அரசியல் என்பது சமூக சேவை. ஒரு அரசியல்வாதி ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பிரதிநிதியாக இருப்பார் என்றுதான். அவருடைய வேலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேத்துவது தான். அதனால் அது வியாபாரம் கிடையாது. மக்கள் சேவை. அந்த வகையில் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். அது புதுசு ஒன்றும் கிடையாது.
அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதில் தப்பு கிடையாது. இது ஜனநாயக நாடு. யார்வேண்டுமானாலும் வரலாம். எல்லா அரசியல்வாதிகளும் சாதி, மதம், எல்லாமே பார்க்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மேற்கொண்டு நல்லது பண்ணலாம் என்கிற எண்ணத்தில் தான்.
போதைப்பொருள் பழக்கம் கொரோனாவிற்குப் பிறகு அதிகமாகி இருக்கிறது. அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதேபோல் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தினால் நல்லதுதான்" என்றார்.