Skip to main content

"பலமுறை ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறேன்" - விக்ரம் பிரபு

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

vikram prabu speech in irugapatru thanks giving meet

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,  ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், படக்குழு சார்பில் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது, நடிகை அபர்ணதி பேசும்போது, “இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி  'கிழித்து' போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்” என்று கூறினார்.

 

விக்ரம் பிரபு பேசும்போது, “இறுகப்பற்று படம் ரிலீஸான அக்டோபர் 6ஆம் தேதி தான் என் மனைவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்காக இதை டெடிகேட் பண்ணுவதாக கூறினேன். டெடிக்கேட்டும் பண்ணிவிட்டேன். அப்போது என்னிடம், நீங்களும் கிட்டத்தட்ட படத்தில் பார்த்த கதாபாத்திரம் போல தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தபோது படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களுடனும் என்னை தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. எந்த ஒரு படமும் ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிய வேண்டும்.. அல்லது நம்மை முழுதாக பொழுதுபோக்கு உணர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும்.. எல்லா படத்திற்கும் ஒரே மாதிரியாகத்தான் பாடுபடுகிறோம். சில படங்கள் தான் மக்களிடம் சேருகின்றன. எந்த ஊருக்கு போனாலும் அங்கே உள்ள வீடுகளில் என்னுடைய தாத்தா படம் இருக்கும். இறுகப்பற்று படமும் அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. சில படங்களை ரசிகர்களுக்கு சரியாக கொடுக்காததற்காக அவர்களிடம் பலமுறை வருத்தம் தெரிவித்திருக்கிறேன். அந்த வருத்தம் தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது” என்றார்.

 

இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “படம் பார்த்துவிட்டு மனைவி தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், கணவன் நீண்ட நாளைக்கு பிறகு தன்னிடம் இரண்டு மணி நேரம் செலவிட்டு பேசியதாகவும், இப்படம் முன்பே வந்திருந்தால் எங்களது ரிலேஷன்ஷிப்பை காப்பாற்றி இருப்பேன் என்பது போன்று பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட என்னை ஒரு மனோதத்துவ நிபுணராகவே ஆக்கி விட்டார்கள் என நினைக்கிறேன். நடிகை அபர்ணதி இப்போது என்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகிறார். ஆனால் என்னை டார்ச்சர் பண்ணிய நடிகை என்றால் அது அவர் தான்.. அவர் காலில் மட்டும் தான் விழவில்லை.. அந்த அளவுக்கு கெஞ்சினேன்.  நான் எந்த காட்சியை படமாக்குகிறேனோ அதே மூடிலேயே இருக்க விரும்புவேன். ஆனால் அவர் சீரியஸான காட்சியில் நடித்துவிட்டு வந்து என்னிடம் ஜாலியாக பேசி மூடை மாற்ற முயற்சி செய்வார். ஆனால் சானியா ஐயப்பனை பொறுத்தவரை என்ன காட்சி எடுக்கிறோமோ அதே மூடில் இருப்பார் அவர் அழும்போது நானும் அழுவேன்.. 

 

விதார்த்தும் நானும் 13 வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றினோம். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தான் வடிவேலுவின் படம் எனக்கு வந்தபோது வேறு வழியின்றி அந்தப்படத்தை கைவிட நேர்ந்தது. விதார்த்தும் அதை பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு என்னை அனுப்பி வைத்தார். அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தை அவருக்கு கொடுத்திருக்கிறேன். விக்ரம் பிரபுவுக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். சிறுவயதில் சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்று சொல்வார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடமும் கூறுவேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என நம்பினேன். அதன்பிறகு அவர் என் தாத்தா இல்லை என சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார்" என்றார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்