பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்த படம் எல்லாருக்குமே ஸ்பெஷல். எஸ்.ஆர். பிரபு, உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கு என்று என்னை அழைத்தபோது, அவரே இப்படி சொன்னால் நிச்சயமாக அதில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. 15 நிமிடம் கதை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க எல்லா நடிகர்களும் விரும்புவார்கள். முழு கதையையும் நான் படிக்கவில்லை. அதேபோல இன்னும் படமும் பார்க்கவில்லை. ஜஸ்டின் பிரபாகரன் பாடல் உருவாக்கும் காட்சியை நேரில் பார்த்து பிரமித்தேன். ஒளிப்பதிவாளர் கோகுல் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் பேசாமலேயே அனைவரிடமும் வேலை வாங்கியதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அக்டோபர் எனக்கு ரொம்ப பிடித்த மாதம். காரணம் என் தாத்தாவின் பிறந்தநாள் அக்டோபர் 1 ஆம் தேதி தான் வருகிறது. என் மனைவியின் பிறந்த நாளும் அக்டோபர் 6 ஆம் தேதி தான். இந்த படமும் அக்டோபர் 6ல் தான் வெளியாகிறது. அதனால் உனக்காகத்தான் இந்த படமே என்று சொல்லி அவரை குளிர்வித்து விட்டேன். என்னை ஒரு நடிகராக தொடர்ந்து நிலைநிறுத்த உதவி வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு எனது நன்றி” என்று கூறினார்.
இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் வெளியிட்ட 8 நிமிட ‘கேப்’ வீடியோ பற்றி பேசுவதா, இல்லை என்னுடைய திரையுலக பயணத்தில் விழுந்த 8 வருட ‘கேப்’ பற்றி பேசுவதா என்கிற எண்ணம் தான் இங்கே வந்ததில் இருந்தே ஓடிக்கொண்டிருந்தது. எட்டு வருடத்திற்கு முன்பு என்னுடைய முந்தைய படத்தின் பத்திரிகையாளர் காட்சி இதே இடத்தில் நடந்தபோது இங்கிருந்து கிளம்பி போனவன் இப்போதுதான் மீண்டும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்கு முன்பு காமெடி படங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்து நான் அந்த படங்களை இயக்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை படத்தின் ஹீரோவுக்காக பயன்படுத்திக் கொண்டேன். இன்று கூட வடிவேலுவிடம் பேசிவிட்டு தான் வந்தேன்.
என்னை மாதிரி ஒரு தோல்வி பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு வெற்றியை பரிசாக கொடுத்துவிட்டு அவரைப் பற்றி நிறைய பேசுவேன். சினிமாவை விட்டு விலகி வெகு தூரம் போனாலும் ஒரு நல்ல படத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் என் நண்பர் கமல்நாத் மூலமாக தயாரிப்பாளருடன் சந்திப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கதை சொல்லப்போய் கசப்பான அனுபவம் நிறைய ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே எனது முந்தைய தோல்விகளை பார்க்காமல், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டு, தொடர்ந்து என்னை ஊக்கம் கொடுத்து இந்த படத்தின் கதையை உருவாக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் உங்களிடம் ஒரு நெருப்பு இருக்கிறது என்று அவர்கள் சொன்னபோது, நானே சாம்பலாகி விட்டேன் என்னிடம் என்ன நெருப்பு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் ஒரு சின்ன கங்கு ஒன்றை என்னுள் பார்த்தவர்கள் அதை பெரிய நெருப்பாக மாற்றினார்கள். இந்தப் படத்தின் மூலம் எனது நேர்மையை நான் உங்களுக்கு காட்டுகிறேன். இதற்கு பிறகு நான் அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.