மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே. இவர் தமிழில் கமல்ஹாசனின் 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும் மராத்தி, இந்தி,தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். கடந்த 5 ஆம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சிறுநீரகம், இருதயம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை கோமா நிலைக்குச் சென்றதாகச் சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு விக்ரம் கோகலே காலமானதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், விக்ரம் கோகலே மனைவி கணவர் இறந்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். மேலும், கடந்த 24 மணிநேரத்தில் இருந்து விக்ரம் கோகலே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்கு பல உறுப்புகள் செயலிழந்துள்ளதால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
77 வயதான விக்ரம் கோகலே இறந்ததாக வெளியான செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்திய நிலையில் அவரது மனைவி தற்போது அதனை மறுத்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும், அவர் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.