![vijay sethupathi](http://image.nakkheeran.in/cdn/farfuture/c-qZMfkRcaQm6856tLYvINe7IZAobjrCm7a9ZEWKGhQ/1533347688/sites/default/files/inline-images/vijaysethu.jpg)
சமூக வலைத்தளங்கள் ஆரம்பித்த புதிதில் சினிமா துறையினர் அதிலிருந்து விலகியே இருந்தனர். பின்னர் நாளடைவில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களை வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்போது புகைப்படங்களும், தன் படம் குறித்த அப்டேட்களையும் வெளியிட்டு வருகின்றனர். இருந்தும் சில பிரபலங்கள் இன்னமும் சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டாமலே உள்ளனர். அந்த வரிசையில் இருந்த நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்கள் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இதே போல் தற்போது விஜய்சேதுபதியும் ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி உள்ளார். பொதுவாக நடிகர், நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி பின்தொடர்கிறார்கள். அதில் நடிகர், நடிகைகள் பெயரில் பல்வேறு போலி கருத்துக்களும் பதிவாகின்றன. இதனால் நடிகர்களுக்கு சிக்கல் ஏற்படுகின்ற காரணத்தால் தன் பெயரில் உள்ள போலிகளை அப்புறப்படுத்த விஜய்சேதுபதியே ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கி உள்ளார். மேலும் அதில்... "Twitter - ல் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். #விஜய்சேதுபதி" என்று தன் முதல் பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்சேதுபதியின் இந்த புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.