கடந்த 2011 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் 'சட்டப்படி குற்றம்' படத்தை இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் விளம்பர செலவு ரூ. 76 ஆயிரத்தைத் திருப்பி தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் மீது அல்லிக்குளம் 25 வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அதில், "சட்டப்படி குற்றம் படத்தை விளம்பரப்படுத்த எஸ்.ஏ சந்திரசேகருடன் ரூ. 76 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அவர் ஒப்பந்தத்தின் படி பணத்தை தரவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், "சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் உள்ள ஏ.சி, டேபிள், உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் ஜப்தி செய்ய சென்ற ஊழியர்களை அனுமதிக்காததால் காவல்துறையின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் அவரது தந்தை கொடுக்க வேண்டிய ரூ.76 ஆயிரம் பணத்திற்காக வீடு ஜப்தி செய்யப்படுவது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.