நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எனப் பண்முக திறமைக் கொண்டவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல், அடக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த நினைவிடத்தில் திரை பிரபலங்கள் தொடங்கி இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்த வருவோருக்கு, உணவு அன்னதானமாக அங்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக விஜயகாந்த் நினைவுச் சின்னம் இருப்பதாக விருது வழங்கப்பட்டுள்ளது.