சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்தியாவில் இந்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி தற்போது 13 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இதனிடையே மற்ற இந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தமிழில் நடிகர் கமல்ஹாசனை தொகுப்பாளராக வைத்து தொடங்கப்பட்ட தமிழ் பிக்பாஸ் மூன்று பிக்பாஸ்களை வெற்றிகரமாகக் கடந்து தற்போது நான்காவது சீசன் அக்டோபர் நான்காம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
தற்போது இதற்கான விளம்பரங்களை ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் மூன்றாவது சீசன் போட்டியாளர் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் போட்டியாளராக பங்கேற்றதற்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள கஸ்தூரி, “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே ஆதரவற்ற குழந்தைகளோட ஆபரேஷன் செலவுக்காகத்தான். நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. ஆனால் இதிலும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
கஸ்தூரியின் குற்றச்சாட்டிற்கு விஜய் டிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “எங்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு சரியான கால அளவில் உரிய தொகையை அளிப்பதை தார்மீக பொறுப்பாக ஏற்றிருக்கிறோம். பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொடுக்கப்பட வேண்டிய சம்பளத் தொகை செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அவருக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகை இன்னும் செலுத்தப்படவில்லை. அதற்கு காரணம், நடிகை கஸ்தூரியின் ஜிஎஸ்டி விவரங்கள் சரிவர இல்லை என்பதே. அதற்காக அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் கேட்டிருக்கிறோம். அந்த ஆவணங்களை அவர் தாக்கல் செய்துவிட்டால், ஜிஎஸ்டி தொகை செலுத்தப்பட்டுவிடும். மேலும், அவர் எங்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான இன்வாய்ஸ் இன்னும் வழங்கவில்லை. அது கிடைத்துவிட்டால் அந்த தொகையும் செலுத்தப்பட்டுவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.