நடிகர் விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிலையில் விஜய் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சூழ கூட்ட நெரிசலைத் தாண்டி ஒரு வழியாக நிகழ்வு நடைபெறும் விடுதிக்கு வந்துள்ளார். விஜய்யை பார்த்த பிறகு அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். நிகழ்வு தொடங்கிய நிலையில் விருது கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பின்பு மேடைக்கு வந்த விஜய் பேசுகையில், அவரது விருப்பமான வசனத்துடன் 'என் நெஞ்சில் குடியிருக்கும்...' எனத் தொடங்கினார்.
அவர் பேசுகையில், "சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அதில் வரும் அழகான வசனம், 'காடு இருந்தா எடுத்துக்குவானுங்க... ரூபாய் இருந்தா புடிங்கிடுவாங்க... ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது'. அது என்னை ரொம்ப பாதித்துவிட்டது. மேலும் நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் அதுதான் எதார்த்தமும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு ஏதாவது ஒன்று செய்யணும் என்று ரொம்ப நாள் யோசனை. அதுக்கான நேரம் தான் இது என்று நினைக்கிறன். இதற்காக உழைத்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் இலவசமாக கிடைக்கிறது அட்வைஸ் தான். அது உங்களுக்கு சுத்தமாக புடிக்காது என்று தெரியும். இந்த மாதிரி ஒரு நிகழ்வில் படிப்பை தாண்டி எதை பேச வேண்டும் என்பது தெரியவில்லை.
எனக்கு பிடித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். பிடித்தால் எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். கல்லூரி போறோம், பட்டம் வாங்குறோம். இது மட்டுமே முழுமையான கல்வி கிடையாது என்பதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒன்று சொல்லியிருக்கிறார். ‘நாம் பள்ளிக்கு போய் கத்துக்கிட்டது படிச்சது எல்லாமே மறந்த பிறகு என்ன எஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி.’ முதலில் இது புரியவில்லை. அதன்பிறகு போகப் போக கொஞ்சம் புரிஞ்சது. அதனால் உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் படிச்ச பாடத்தை தவிர மிஞ்சியிருப்பது உங்களுடைய குணாதிசயம், சிந்திக்கும் திறன். கண்டிப்பாக தேர்வு மதிப்பெண் என்பது முக்கியம் தான். ஆனால் அதைத் தாண்டி, குணாதிசயத்துக்கும், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் அது முழுமையான கல்வியாக மாறும்.
எடுத்துக்காட்டாக, நீங்க பணத்தை இழந்துட்டீங்கன்னா... ஆரோக்கியத்தை இழந்துடீங்கன்னா எதையோ ஒன்றை இழக்குறீங்க. குணத்தை இழந்துட்டீங்கன்னா எல்லாத்தையும் இழந்துவிடுவீர்கள். இதை நான் சொல்வதற்கு காரணம், இவ்வளவு நாள் நீங்கள் பெற்றோர் அறிவுறுத்தலின் படி இருந்துட்டீங்க. ஆனால் இப்போது மேற்படிப்புக்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்வீர்கள். அதனால் முதல் முறையாக பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து விலகி தனி வாழ்க்கைக்குள் செல்கிறீர்கள். அப்போது ஒரு சுதந்திரம் உங்களுக்கு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுய ஒழுக்கத்தோடு ஒழுக்கம் என நான் குறிப்பிடுவது என்ஜாய் பண்ணவே கூடாது என சொல்லவில்லை. என்ஜாய்மென்ட் என்பது ரொம்ப முக்கியம். அதே சமயம் உங்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். நம்முடைய வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது" என்றார்.