லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய விஜய் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, முதலில் மேடைக்கு வந்த விஜய் 'நா ரெடி தான் பாடலை பாடினார். பின்பு பேச ஆரம்பித்த அவர், "என் நெஞ்சில் குடியிருக்கும்... எனது அன்பான நண்பா நண்பிகள் எல்லாருக்குமே வணக்கம். இவ்ளோ நாளா நான் தான் என் நெஞ்சில உங்களை குடி வச்சிருக்கேன்னு நெனச்சேன். இப்போ தான் புரியுது, அது நான் இல்லை, நீங்க தான் என்ன நெஞ்சில குடி வச்சிருக்கீங்கன்னு. அந்த மனசு தான், நான் குடியிருக்கிற கோவில். இது சினிமா டயலாக் என நினைக்க வேண்டாம். உண்மையிலே இதை உணர்ந்து ஃபீல் பண்ணி தான் சொல்றேன்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வச்சிருக்கிற இந்த அன்புக்கு திருப்பி நான் என்ன செய்ய போறேன் நண்பா... திருப்பி என்னால என்ன செய்ய முடியும் நண்பா... என் உடம்பு தோலை உங்க காலுக்கு செருப்பா தைச்சு போட்டா கூட இந்த அன்புக்கு ஈடாகாது. நான் சாகுற வரைக்கும் ஒன்னு நிச்சயமா செய்ய முடியும். அது உங்களுக்கு உண்மையா இருக்கிறது. உங்களுடைய உழைப்பில் எனக்காக செலவு பண்ற ஒவ்வொரு காசுக்கும் நான் உண்மையா இருக்கிறது.
கொஞ்ச நாளா சோசியல் மீடியாவில் பாக்குறேன். உங்க கோபம் எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கே ஏன்? வேணாம் சகோதரா. நம்ம யார் மனசையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு அது வேலையும் இல்ல. நமக்கு நிறைய வேலை இருக்கு. வீட்ல அப்பா அடிச்சா பிள்ளை எங்க போய் கதற முடியும்? அந்த மாதிரி நினைச்சு அதை உட்ருங்க. இவ்ளோ கோவம் உடம்புக்கு நல்லது இல்லை. காந்தி சொன்ன ஒரு வாசகம், அகிம்சை வன்முறையை விட உறுதியான வலிமையான ஆயுதம். அதனால் கூல் காம்" என்றார்.