பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பையோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்கள் நீண்டு கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தன் பயோபிக் உருவாகவுள்ளது தொடர்பாக முத்தையா முரளிதரன், “விஜய் சேதுபதி போன்ற ஒரு திறமையான நடிகர் என் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும்” என்றார்.
ஆனால், பலர் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சமூக வலைதளத்தில் எதிர்த்தனர். விடுதலை சிறுத்தை கட்சி இதை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் பல ஈழத் தமிழர்களும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்புவதால் விஜய் சேதுபதி இதிலிருந்து விலக திட்டமிட்டிருப்பதாக என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பது குறித்து உறுதி செய்துள்ளார். அதில், “நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனிடமே இதை நேரில் சொன்னேன். இந்த படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கும். என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன்.
அதுபோன்ற ஒரு காட்சியும் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.