
மத்திய அரசு கடந்த ஜனவரியில் கலைத் துறை சார்பில் அஜித்குமாருக்கு இந்தாண்டுக்கான பத்ம பூஷன் விருது அறிவித்தது. இதையடுத்து விருது வழங்கும் விழா கடந்த 28ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடந்த நிலையில் அதில் பங்கேற்ற அஜித் பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் வாங்கினார். இதையடுத்து விருது வாங்கிவிட்டு சென்னை திரும்பிய அஜித், விமான நிலையத்தில் எல்லோருக்கும் நன்றி என செய்தியாளர்களிடம் சொன்னார். மேலும் விரைவில் சந்திப்பதாகவும் கூறினார்.
இதனிடையே விருது பெற்றது ஒரு பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “உண்மையில் விருது கிடைத்ததை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. மனதளவில் நான் இன்னும் ஒரு மிடில் கிளாஸ் நபராகவே இருக்கிறேன். ஆனால் இங்கே இருப்பது, இந்த உணர்வுகளை அனுபவிப்பது ஒரு கனவுலகம் போல் இருக்கிறது. முதலில், நான் திக்குமுக்காடிப் போனேன். ஆனால் இதுபோன்ற தருணங்கள் தான் நம்மை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். அல்லது சரியான பாதையில் தொடர்ந்து நம்மை பயணிக்க உறுதியளிப்பதாகவும் பார்க்கிறேன். இப்போது நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன். அதனால் என் வேலையில் கவனமாக இருக்கிறேன். தொடர்ந்து அதில் முன்னேறு உழைப்பேன்.
பட்டங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதை பெயர்களில் முன்னால் சேர்த்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. என்னை அஜித் அல்லது ஏ.கே, அதுவும் இல்லையென்றால் வேறு எப்படி வேண்டுமானாலும் என்னை அழைப்பதையே விரும்புகிறேன். நான் ஒரு நடிகர். அதற்காக சம்பளம் வாங்குகிறேன். இதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான். புகழும் செல்வமும் நீங்கள் செய்ததற்காக கிடைப்பது. நான் என் வேலையை நேசிக்கிறேன். எனக்கு பிடித்ததையே கடந்த 33 ஆண்டுகளாக செய்து வருகிறேன். என் வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறேன். அதிகமாக யோசிப்பதை தவிர்ப்பேன். ஒரே நேரத்தில் நிறைய விஷயங்களை செய்யமாட்டேன். அதே சமயம் எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆர்வமுள்ள விஷயங்களை செய்வேன்” என்றார்.