
சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் மே 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஹைதராபாத், கேரளா ஆகிய இடங்களைத் தொடர்ந்து மும்பையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, படத்தில் தனக்கு பிடித்த காட்சியை கூறினார். அவர் பேசியதாவது, “இந்த படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று இருக்கிறது. அது என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. அந்த காட்சியில் நடனம், சண்டை, எமோஷன், கனிமா பாடல் உட்பட நிறைய விஷயங்கள் இருக்கும். படத்தின் ஆரம்பத்திலே வரும்” என்றார்.
இதையடுத்து வாடிவாசல் படம் குறித்து பேசிய சூர்யா, “இந்த வருஷம் வாடிவாசல் ஆரம்பிக்கிறோம்” என்றார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ரெட்ரோ படத்தின் நிகழ்ச்சியில் அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் வம்சி தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக சூர்யா தெரிவித்தார். இப்படம் அவர் இப்போது நடித்து வரும் 45வது படத்திற்கு பிறகு உடனடியாக ஆரம்பிக்கவுள்ளது. 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இதை முடித்துவிட்டு வெங்கி அட்லூரி படத்தை முடித்துவிட்டுத்தான் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தாண்டு இறுதியில் இப்படம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜூலையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு பின்பு வெங்கி அட்லூரி படத்தால் தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.