தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தனது எதார்த்த நடிப்பாலும், வசீகர பேச்சாலும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தையே தன் பக்கம் திருப்பியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, கதாநாயகன், வில்லன், கவுரவ தோற்றம் என கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் சிக்சர் அடித்துள்ளார். தமிழ் மொழியைத் தாண்டி மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துவருகிறார்.
சமீபத்தில் துபாயில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 50வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், "நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வந்தேன். இங்குள்ள பர்துபாய், அல் பஹிதி சாலைகளில் என் கனவுகளுடன் நடந்து சென்றிருக்கிறேன். துபாய் எனக்குப் புதிய நாடு, வெளிநாடு என்று உணர்வு இல்லாமல், இரண்டாவது தாயகமாக உணர்ந்திருக்கிறேன். இங்கு மூன்று ஆண்டுகள் இருந்துவிட்டு சென்னை சென்று திருமணம் செய்துகொண்டேன். அதன் பிறகு படத்தில் நடித்து தற்போது இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். துபாய் வரும்போது எல்லாம் நான் வேலை செய்த இடத்தை மறக்காமல் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.