தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ‘ஃபீனிக்ஸ் வீழான்’என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத் உள்ளிட்ட பலரும் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குத்துசண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகியது. சென்னையில் நடந்த டீசர் வெளியிட்டு விழாவில் படக்குழு மற்றும் விஜய்சேதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய விஜய்சேதுபதி, “என் மகன் சினிமாவுக்கு வருவதை பற்றி எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்தபிறகு அனல் அரசு மாஸ்டர் என் மகனை சந்தித்து கதை சொன்னார். இதை நான் துளியும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. திரைத்துறைக்குள் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் என் மகனுக்கு சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் தாக்குப்பிடிப்பது மிக மிக கஷ்டம். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. அனல் அரசு என்ற அற்புதமான மனிதர் மூலமாக அவன் அறிமுகம் ஆகிறான். அவன் பிறந்து இதுவரைக்கும் 19 தந்தையர் தினம் கொண்டாடி இருக்கிறேன். ஆனால் இதுதான் எனது சிறந்த தந்தையர் தினமாக இருந்துள்ளது. ”என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதிபதியின் நானும் ரௌடிதான், சிந்துபாத் உள்ளிட்ட சில படங்களில் சூர்யா தந்தையுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.