'அர்ஜுன் ரெட்டி' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் 'நோட்டா' படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா பேசியபோது...."பெள்ளி சூப்புலு' படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன். இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்" என்றார்.
Published on 09/03/2018 | Edited on 10/03/2018