தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ள 'லால் சலாம்' படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையே 2020ஆம் ஆண்டு வெளியான 'அட்கான் சட்கான்' என்ற இந்தி படத்தைத் தயாரித்துள்ளார். பிறகு 2021ஆம் ஆண்டு வெளியான '99 சாங்ஸ்' என்ற படத்தைத் தயாரித்து கதையும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற முறையில் உருவாக்கப்பட்ட லீ மஸ்க் (குறும்படம்) படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் மாதவன் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் 'லீ மஸ்க்' படத்தைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , "அற்புதமான அனுபவமாக இருந்தது. என்ன ஒரு தொலைநோக்கு பார்வை ஏ.ஆர் ரஹ்மான் சார். அனைத்து வகையான கலையிலும் மாஸ்டர் ஏ.ஆர் ரஹ்மான். இது போன்று இன்னும் அவர் உருவாக்கும் அற்புதமான அனுபவங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். துபாயில் இதனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நானும், நயனும் இந்த அனுபவத்தால் பிரமித்து போனோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.