நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்கள். இந்தக் குழந்தைகள் வாடகைத் தாய் மூலம் பிறந்திருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சட்ட விதிமுறைகளை மீறி இருவரும் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.
இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்ரமணியன் இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் எனவும் பின்பு இந்த விவகாரம் குறித்து Director of medical services விசாரணை நடத்த வேண்டுமா என முடிவு எடுப்பார்கள் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதில் விதி மீறல்கள் இருக்கிறதா மற்றும் முரண்பாடுகள் உள்ளதா என்பதை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், "இரட்டைக் குழந்தை விவகாரம் தொடர்பாக இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது.
அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த சிகிச்சை தொடர்பான விசாரணையில் இத்தம்பதியருக்கு (Intending Couple) பதிவுத் திருமணம் 11.03.2016இல் நடைபெற்றதற்கான பதிவு சான்றிதழ், மருத்துவமனையின் உண்மைத்தன்மை பதிவுத் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவச்சான்று: தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது, 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அந்த தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை" என பல நிகழ்வுகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் விதிகளை மீறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.