கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். இதுதான் இவர் நடிப்பில் வெளியான முதல் தமிழ் படம். அவர் பாலிவுட்டில் பல வருடங்களாக நடித்து வருகிறார். சிறந்த நடிகை என்று தேசிய விருதும் பெற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகிருக்கும் மிஷன் மங்கல் படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. அந்த படத்தின் புரோமோஷன் ஒன்றில் வித்யா பாலன் தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகள் தேடியபோது தான் பட்ட கஷ்டத்தை சொல்லியிருந்தார்.
அதில், “தென்னிந்திய சினிமாவில் என்னை நிறையமுறை நிராகரித்துள்ளார்கள். அப்போது நிறைய மலையாள படங்களில் என்னை முதலில் கமிட் செய்துவிட்டு, எனக்கு பதிலாக வேறு ஒருவரை மாற்றினார்கள். தமிழ் சினிமா ஒன்றில் நடித்துகொண்டிருந்தேன். அதன்பிறகு படத்திலிருந்து என்னை நீக்கினார்கள். ஏன் திடீரென நீக்கினார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காக நானும், எனது தந்தையும் விமானம் மூலம் சென்னைக்கு சென்று, அந்த தயாரிப்பாளரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அவர் நான் நடித்த ஷாட்களை காட்டி, ஹீரோயின் போல இந்த பெண் இருக்கிறதா என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று என்னையும், என் அப்பாவையும் பார்த்து கேட்டார். இந்த முடிவை முதலில் இயக்குனர்தான் எடுத்தார் என்று தயாரிப்பாளர் தெரிவித்தார். என்னை நீக்கிவிட்டு வேறு ஒரு நபரை வைத்து படம் எடுக்கவும் அவர்கள் தொடங்கிவிட்டார்கள். என்பதை அறிந்த என்னுடைய தந்தை, தயாரிப்பாளரை அழைத்து என்ன பிரச்சனை என்பதை சொன்னால்தான் தெரியும் என்றார். அவருக்கு என்ன தவறு என்பதை தெரிந்துகொள்ள இருந்தார்”
மேலும் அந்த பேட்டியில் பேசிய வித்யா பாலன், “அந்த நிகழ்விலிருந்து நான் என்னையே வெறுத்துவிட்டேன். என்னையே எனக்கு பிடிக்காமல் மிகவும் கேவலமாக என்னை நினைத்துகொண்டேன். ஆறு மாதங்கள் வரை என்னுடைய முகத்தை நான் கண்ணாடியில் பார்க்க தயங்கினேன். தொடக்கத்தில் என்னை இப்படி கேவலப்படுத்திய அந்த நபரை என் வாழ்நாளில் மன்னிக்கவே கூடாது என்று இருந்தேன். ஆனால், தற்போது அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துகொள்கிறேன். என்னையே என்னை மிகவும் நேசிக்க கூடியவளாய் மாற்றியிருக்கிறார்” என்று கூறினார்.