
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை(ஏப்ரல் 6) வரை நடக்கவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்வில் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வெற்றிமாறனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. பாலுமகேந்திரா குறித்தான கேள்விக்கு “அவரிடம் நான் வேலை செய்யவில்லை என்றால் சமூகத்துடைய தேடுதல் இருந்திருக்காது. ஆனால் படம் எடுத்திருப்பேன். அவருடன் பயணித்ததால் தான் சமூகத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக கோபம் வருகிறது” என்றார். பின்பு விடுதலை படம் குறித்த கேள்விக்கு, “நான் 45 வருஷம் காலேஜில் படித்தது, பாலுமகேந்திரா சார்கிட்ட படித்தது, சமூகத்தில் படித்தது... இது எல்லாத்தையும் விட விடுதலை படம் எடுத்த இந்த 4 வருஷத்தில் நிறைய கத்துக்கிட்டேன். நிறைய வாசித்தேன். அதில் நிறைய தலைவர்களை பத்தி தெரிஞ்சிகிட்டேன். பொதுவாக மேடையில் பேசும் தலைவர்களைத்தான் நமக்கு தெரியும். ஆனால் மக்களோடு நின்று சண்டை போட்டு விடுதலையை வென்று எடுக்கும் தலைவர்களை பற்றி நமக்கு தெரிவதில்லை. அவர்கள் தான் உண்மையான தலைவர்கள்.
அது போன்ற தலைவர்கள் இங்கே ஆயிரம் பேர் இருக்கிறார்கள். விடுதலை படத்துக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது மார்க்சிஸிய மாணவனாகவும் இருக்கிறேன். எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சிஸிய கொள்கையின் மேல் கட்டமைக்காமல் இருக்கும் எனில் அது எதோ ஒரு கட்டத்தில் மக்களுக்கு எதிர் நிலையில் போய் நிற்கும். இது என்னுடைய புரிதலும் நம்பிக்கையும். இந்த மேடையில் நிற்பதை மரியாதையாக உணர்கிறேன்” என்றார்.