
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான எம்புரான் படம் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி அமைப்புகள், முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். வரி ஏய்பு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு கோகுலம் சிட்ஃபண்ட்ஸின் கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்த ஆவணங்கள் அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக தற்போது அமலாக்கத்துறையினர் கோகுலம் சிட்ஃபண்ட்ஸின் நிறுவனர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்கள் மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் ஆகிய வற்றில் சோதனை நடத்திய நிலையில் இன்று காலை அச்சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 1.5 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்புரான் படம் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.